சமுதாயத்தின் சிறிய அங்கமான பாலியல் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து!!

புதுடெல்லி : சமுதாயத்தின் சிறிய அங்கமான பாலியல் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக் காரணத்தினால் நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடிங்கி விட்டது. இதனால் வரலாற்றில் இல்லாத அளவில் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலையும் நின்றுவிட்டது.

இதில் முடக்கம் அறிவிக்கும் முன்னரே அவர்களாகவே தாமாகவே முன்வந்து தொழிலை நிறுத்தியதோடு, வாடிக்கையாளர்களையும் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பாலியல் தொழிலாளர்களின் வருமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அவர்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கு வகையில் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

 இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உத்தரவில்,சமுதாயத்தின் சிறிய அங்கமான பாலியல் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்ளுக்கு உதவிகளை செய்ய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தது ? பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் அனைத்து மாநில அரசுகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: