திருக்கடையூரில் 50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் 50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கடையூர் டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் இருந்து 2000 பேர் இந்த நூலகத்தில் வாசகராக உள்ளனர். இங்கு வரலாறு, இலக்கியம்,நாவல்கள், தலைவர்களின் வரலாறு, கட்டுரை, ஆன்மீகம், சமையல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 27,503 நூல்கள் உள்ளன. நாள்தோறும் 100 க்கும் வருகை தருகின்றனர். நூலகத்தில் போதிய இட வசதி இல்லாததால் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் அமுர்தவிஜயகுமார் கூறியதாவது: நான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த 2006 முதல் 2011 வரை பலமுறை அன்றைய மாவட்ட ஆட்சியரை சந்தித்து நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும், நூலகத்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வாசகர்களின் நலன் கருதி 50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என்று கூறினார்.

Related Stories: