தொடர் மழை எதிரொலி: பர்கூர் மலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது

ஈரோடு: பர்கூர் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஈரட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை மற்றும் எண்ணமங்கலம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், வனக்குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. தாமரைக்கரை அடுத்துள்ள ஈரட்டி பள்ளத்தில் ஆர்பரித்து வரும் நீர்வீழ்ச்சியை காண அந்தியூர், பவானி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வறட்சி நீங்கி மலைப்பகுதி முழுவதும் பசுமை படர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பழங்குடியின விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: