ஆலன் காயம் ஆலங்காயமானது: 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஏரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து 20 கிமீ தொலைவில் ஆலங்காயம் பேரூராட்சி உள்ளது. ஆலங்காயம் என்று பெயர் பெற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் ஆலமரங்கள் நிறைந்திருந்ததால் ஆலங்காயம் என்று பெயர் பெற்றதாக கூறுகின்றனர்.

மேலும் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் யானை ஒன்றை ஆலன் என்ற வெள்ளைக்கார தளபதி துப்பாக்கியால் சுட்டதால் காயம்பட்ட அந்த யானை இப்பகுதி மலையடிவாரத்தில் சுற்றி திரிந்து இறந்ததாகவும் அதனை நினைவு கூறும் வகையில் இருந்த ஆலன் காயம் பின்னர் ஆலங்காயம் ஆனது என்று இப்பகுதி மக்கள் பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். ஜவ்வாது மலை அடிவாரத்தில் சுற்றிலும் சுமார் 16,800 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் மலைகள் நிறைந்து யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் காணப்படும் பகுதியே ஆலங்காயமாகும். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்த்தல் போன்றவையாகும்.

விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. 8500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. 450 ஏக்கரில் பட்டுப்புழு உற்பத்தி செயயப்படுகிறது. வாணியம்பாடி, தர்மபுரி கோலார் ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1955 ஆம் ஆண்டில் தனி பேரூராட்சியாக உருவாக்கப்பட்ட ஆலங்காயம் 15 வார்டுகளை கொண்டுள்ளது. மேலும் 20 சிறு, குறு கிராமங்கள் உள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதியின் மக்கள் தொகை 32,840 பேர் உள்ளனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆலங்காயம் பெத்தூரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் தீர்த்தம் பகுதியில் பழமைவாய்ந்த தீர்த்தகிரியிஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவர் தீர்த்தகிரியிஸ்வரர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நீரூற்று வற்றாமல் எப்போதும் வடிந்துகொண்டே இருக்கும்.

மேலும் இக்கோயிலில் சுற்று பிராகாரத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிக்கிழமை காலை நேரத்தில், காட்டு யானை ஒன்று வழிபாடு செய்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்திருக்கோயிலில் உள்ள தீர்த்தகுளத்தில் குளித்துவிட்டு பூஜை செய்தால் உடனடியாக திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகிறது என்பது பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.

அதேபோல இதே பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் திருக்கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். ஆலங்காயம் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொங்கல் விழா காலங்களில் எருதுவிடும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். அதேபோல ஆண்டுதோறும் ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே இரண்டு தேவாலயங்கள் மற்றும் பழமை வாய்ந்த மசூதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

ஆலங்காயத்தில் புலவர் பள்ளி ஏரி, கல் கோயில் பின்புறம் உள்ள ஏரி, 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பங்கூர் பெரிய ஏரி ஆகியவை அமைந்துள்ளது. இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த 3 ஏரிகளும் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. ஆகையால் தற்போது மக்கள் இந்த ஏரியில் இருந்து வரும் நீரை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் ஆலங்காயம் பஸ் நிலையம் முதல் பஜார் வரை உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக காணப்படுவதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவே காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆலங்காயம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்து சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் ஆலங்காயம் பகுதியில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு உழவர் சந்தை அமைக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

ஆலங்காயம் பேருராட்சி மற்றும் ஒன்றியப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே உள்ளது. அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கல்கோயில் மற்றும் பெத்தபலி அம்மன் கோயில் போன்ற அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க வேண்டும்.ஆலங்காயம் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்றி பெத்தூர் பகுதியில் ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்காக அமைந்துள்ள விடுதி போல மாணவியர் விடுதி ஏற்படுத்தி கொடுத்தால் சுற்றுவட்டார பகுதி மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆலங்காயம் பகுதியில் இருந்து நகர பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ் வசதிகளை அதிகரித்து, ஆலங்காயம் பஸ்நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒற்றை யானை அட்டகாசம்

ஆலங்காயம் காப்புகாடுகளில் இருந்து கோடைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உழைப்பு வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வனத்துறையினர் யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

200 ஆண்டுகளாக மத பேதமின்றி நடக்கும் திருவிழா

ஆலங்காயம் பகுதியின் மைய பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு வாய்ந்த பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத புதன் கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நடைபெறும் இந்த திருவிழாவில் 2 பூங்கரகங்கள் உலாவந்து கோயிலில் 3 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த கோயிலில் திருவிழாவில் பிரிவினை இன்றி இப்பகுதி இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் சாதி, மத பாகுபாடுகள் இன்றி 200 ஆண்டுகளாக இத்திருவிழாவை கொண்டாடி வருவதே இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

சாலை வசதி இல்லாத மலைக்கிராமம்

ஆலங்காயத்தில் இருந்து 8 கிமி தொலைவில் உள்ளது நெக்கான மலை இந்த மலைகிராமத்திற்கு சுதந்திரம் பெற்றநாள் முதல் தற்போது வரையில் சாலை வசதியே கிடையாது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் மலைக்கிராம மக்களே தாங்களாக மலையில் மண் சாலை அமைத்துக்கொண்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது மலைக்கிராமங்களுக்கு சாலைவசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: