கொரோனா ஏற்படுத்திய திடீர் மவுசால் மைக்ரோபயாலஜி படிக்க குவிந்த மாணவர்கள்

சேலம்: தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 85 சதவீத சேர்க்கை நிறைவடைந்த நிலையில், கொரோனா காலத்தால் மைக்ரோபயாலஜி படிப்பில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு முதன்முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இடஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள முதல்தர அரசு கலைக்கல்லூரிகளில் (25 ஆண்டுகளுக்கு மேல் உள்ள) 90 சதவீத இடங்களும், இதர கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும் நிரம்பிவிட்டன. தற்போது காலியாக உள்ள ஓரிரு இடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளது.

இதனிடையே, நடப்பாண்டு வந்த கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அந்த நீட்சி, அரசுக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையிலும் எதிரொலித்தது. அதாவது, வைரஸ் தொடர்பான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் ஒன்றான பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சேர வழக்கத்தை விட மாணவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதனால், அனைத்து கல்லூரிகளிலும் அந்த பிரிவு வேகமாக நிரம்பியது.

இதுகுறித்து அரசுக்கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:

அரசுக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விருப்ப பாடம் என்பது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. இளங்கலை தமிழில் தொடங்கி, ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் என ஒவ்வொரு ஆண்டும் ஒருசில பாடங்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டு யாரும் எதிர்பாராத வகையில், இளங்கலை மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவுக்கு கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், சராசரியாக 300 பேர் வரை மைக்ரோபயாலஜி பாடப்பிரிவை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து நாளொரு புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் தன்மை குறித்து வெளிப்படுத்தவும், உரிய மருந்தை கண்டுபிடிக்கவும் பல்வேறு நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இதற்கு ஆய்வு படிப்பான மைக்ரோபயாலஜி பிரதானமாக பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றை உறுதி செய்வதில், ஆய்வகத்தினரின் பங்கு முக்கியம். இதனால், வரும் காலங்களில் இதற்காக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணத்திற்காகவே, நடப்பாண்டு அந்த படிப்புக்கு அதிக போட்டி இருந்தது.

இதில் சேர முடியாதவர்கள், மற்றொரு ஆய்வக படிப்பான இளங்கலை பயோடெக் பிரிவிலும் சேர விருப்பம் தெரிவித்தனர். மாணவர்கள் பிளஸ் 2வில் பெற்ற கட்ஆப் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒருசில கல்லூரிகள் இந்த பாடப்பிரிவில் கூடுதல் இடம் வழங்கக்கோரி, கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் அனுமதி கேட்டுள்ளன. அதன் அடிப்படையில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: