×

சொந்த செலவில் தன் வகுப்பில் படிக்கும் 16 பேருக்கு செல்போன் + மாதாமாதம் ரீசார்ஜ்!

நன்றி குங்குமம்

ஆச்சரியப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை

பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே பள்ளிக்கு நேரத்திற்கு வரமாட்டார்கள், வகுப்புகள் சரியாக எடுக்கமாட்டார்கள் என்பது போன்ற தவறான பிம்பமே இருந்து வருகிறது. ஆனால், கொரோனா காலம் எப்படி அரசு மருத்துவர்களை மனிதருள் மாணிக்கமாகப் பார்க்க வைத்ததோ அதுபோலவே அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் தெய்வங்களாகப் பார்க்க வைத்திருக்கிறது. ஏனெனில், சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா காலத்தில் தங்களிடம் படிக்கும் குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ததும், ஆன்லைன் வசதியில்லாத தங்கள் பள்ளி குழந்தைகளுக்காக சமூக இடைவெளியுடன் மரத்தடி நிழலில் நேரடியாக வகுப்புகள் எடுத்ததும்தான். ஆனால், இதையும் மிஞ்சி நிற்கிறார் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பைரவி. காரணம், தான் வகுப்பெடுக்கும் பத்தாம் வகுப்பு மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போனே வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல. அதற்கு சிம் கார்டு போட்டு பள்ளி திறக்கும் வரை ரீசார்ஜ் செய்து தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார் இந்த நல்லாசிரியை. பெரம்பலூரிலிருந்து மூன்று கிமீ தொலைவில் இருக்கிறது எளம்பலூர் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் உயர்நிலை வகுப்புகளுக்கான உதவி தலைமையாசிரியையாக இருக்கிறார் பைரவி. ‘‘என் வகுப்பு குழந்தைங்களுக்கு நல்லது பண்ணணும்னு தோணுச்சு. ஒரு சின்ன விஷயமா நினைச்சுதான் பண்ணினேன்.

ஆனா, அது இவ்வளவு தூரம் பிரபலமாகும்னு நினைக்கல...’’ என்றபடியே பேசத் தொடங்கினார். ‘‘ஆன்லைன் வகுப்புல படிக்க முடியலனு ரெண்டு குழந்தைகள் தற்கொலை பண்ணிக்கிட்ட செய்தியை பேப்பர்ல படிச்சேன். ரொம்ப மன வருத்தமா இருந்துச்சு. இந்நேரம், எங்க பள்ளிக்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோரை கேன்வாஸ் செய்ற வேலையா கிராமங்களுக்குப் போனேன். அங்க எங்க பள்ளியில படிக்கிற குழந்தைகளின் நிலையைப் பார்க்கவே பாவமா இருந்துச்சு. இவங்களுக்கு ஏதாவது பண்ணுவோம்னு நினைச்சேன். அப்ப என் ஃப்ரண்ட் ஒருத்தங்க, ‘நீங்க நிறைய உதவி பண்ணுவீங்களே… இப்ப ஆன்லைன் கிளாஸுக்காக ரெண்டு மூணு பேருக்கு செல்போன் வாங்கிக் கொடுக்கலாமே’னு சொன்னாங்க. அப்புறம், அமைச்சர் ஒருத்தர் ஒரு குழந்தைக்கு செல்போன் கொடுத்த செய்தியையும் பார்த்தேன். சரி, நாமும் ரெண்டு மூணு குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தரலாம்னு முடிவெடுத்தேன். அப்ப என் பொண்ணு ஜெயவதனா, ‘ஒண்ணு ரெண்டு  பேருக்கு வாங்கித் தராதீங்கம்மா… அது பாரபட்சம் பார்க்கிற மாதிரி ஆகிடும். அதனால, உங்க செக்‌ஷன்ல படிக்கிற எல்லாருக்கும் வாங்கிக் கொடுங்க’னு சொன்னா. அவள் துறையூர்ல பிளஸ் ஒன் படிக்கிறா. அப்புறம் அவளே, ‘எனக்கு ரெண்டு பவுன் நகை எடுத்ததா நினைச்சுக்கிட்டு எனக்கு சேர்த்து வச்ச பணத்தை எடுத்துக்கோங்கம்மா’னு சொன்னா. இதை என் கணவர் முரளியும், ஆறாம் வகுப்பு படிக் கிற என் பையன் ஜெயகிரியும் ஆமோதிச்சாங்க.

இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். நான் ஆன்லைன் வகுப்புக்காக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கும்போது ஆறு குழந்தைங்கதான் வாட்ஸ்அப் எண் வச்சிருந்தாங்க. நான் ஒரு வீடியோ எடுத்து போட்டதுக்கு ரெண்டு பேர்தான் பதில் அனுப்பினாங்க. அதுவும் ஒரு வாரம் கழிச்சுதான் அந்த பதில் வந்தது. ஒன்பது பேர்கிட்ட மொபைல் இல்ல. இருக்கிற ஆறு பேருடைய மொபைலும் அவங்க அப்பாவுடையது. அவர் பல நேரங்கள்ல மொபைலை எடுத்திட்டு போயிடுவார். அதனால, அதிக செலவானாலும் பரவாயில்ல… எல்லாருக்கும் வாங்கிடுவோம்னு உறுதியானேன். நான் ஒன்பதாம் வகுப்புக்கும், பத்தாம் வகுப்புக்கும் கணித ஆசிரியரா இருக்கேன். இப்ப பத்தாம் வகுப்பு குழந்தைங்களுக்குதான் மொபைல் முக்கியம். நான் பத்தாம் வகுப்பு ஆங்கில வழியில படிக்கிற மாணவ - மாணவிகளுக்கு கணித ஆசிரியரா இருக்கேன். முதல்ல வகுப்புல படிக்கிற பதினாறு பேருக்கும் பதினாறு செல்போன் ஆர்டர் கொடுத்தேன். மறுபடியும் என் பொண்ணு, ‘செல்போன் கொடுக்கப் போற பசங்க குடும்பங்கள் எல்லாம் கஷ்டப்பட்டதுனு சொல்றீங்க. நீங்களே சிம் கார்டு வாங்கிக் கொடுத்து ரீசார்ஜும் பண்ணி விடுங்க. இல்லன்னா, பணம் இல்லாம சிம் வாங்கவும் தாமதப்படுத்தலாம்’னு சொன்னா. அதனால, சிம் கார்டும் வாங்கினேன். பள்ளி திறக்கிற வரை நானே ரீசார்ஜும் பண்ணிவிடுறேன்னு சொல்லிட்டேன்...’’ என்கிற ஆசிரியை பைரவி இப்போது ஒரு மாதத்திற்கான ரீசார்ஜ் பண்ணியிருக்கிறார்.   ‘‘பதினாறு பேருக்கும் ஒரேமாதிரியான செல்போனா இருக்கணும்னு ஒரு நிறுவனத்துல ஆர்டர் செய்தேன். ஒரு போன் 6 ஆயிரத்து ஐநூறு ரூபாய் வந்தது. என் தம்பி சேலத்துல உள்ள ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியரா இருக்கான். அவன் ஃப்ரண்ட் கடையில சொல்லி மொத்தமா வாங்கினோம். அதனால, 5 ஆயிரத்து ஐநூறுக்கு கிடைச்சது.

அப்புறம், வோடபோன் நம்பர் வாங்கினோம். அவங்க குழந்தைங்க பேர்ல தரமுடியாதுனு சொன்னாங்க. அதனால, அவங்க பெற்றோர்கிட்ட பேசி ஆதார் கார்டு கொண்டு வரச் சொல்லி வாங்கினோம். பள்ளியில வச்சே ஆக்டிவேட் பண்ணிக் கொடுத்தோம். செல்போனுக்கு 96 ஆயிரம் ரூபாய் வந்துச்சு. அப்புறம், ரீசார்ஜ் ஒருமாசத்துக்கு மட்டும் பண்ணியிருக்கேன். ஏன்னா, டவர் எப்படியிருக்குனு பார்த்திட்டு தொடர்ந்து அதே சர்வீஸ்ல இருக்கலாமா வேண்டாமானு முடிவு பண்ண இந்தமாதிரி பண்ணினேன். அதுக்கு நாலாயிரம் ரூபாயாச்சு. மொத்தமா ஒரு லட்சம் ரூபாய்ல இந்த விஷயத்தை முன்னெடுத்தேன். இந்த போனை பயனுள்ளதா பயன்படுத்துங்கனு குழந்தைங்ககிட்ட சொல்லியிருக்கேன்...’’ என்கிற பைரவி ெதாடர்ந்தார். ‘‘செல்போன் கொடுத்த பிறகு குழந்தைங்களுக்கு ஜூம் ஆப்ல கிளாஸ் எடுத்தேன். அப்ப 12 பேர் கலந்துக்கிட்டாங்க. நாலு பேர் கொரோனா டைம்ல வேலைக்குப் போறதா சொன்னாங்க. அதனால, நேரடியா வகுப்பை எடுக்கிறதைவிட வீடியோவா ரிக்கார்ட் பண்ணி போடுறது நல்லதுனு தோணுச்சு. அதனால, இப்ப வீடியோவா போடுறேன். நான் மட்டுமல்ல. தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூகவியல்னு எல்லா ஆசிரியர்களும் பாடங்கள் எடுக்கிறோம். நான் ஆங்கில வழி வகுப்புக்கு போறதால அவங்களுக்கு முதல்ல வாங்கிக் கொடுத்தேன். அடுத்ததா, தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு படிக்கிற 26 குழந்தைகளுக்கும் செல்போன் வாங்கிக் கொடுக்கணும்னு நினைச்சேன். இதுக்காக நான் முயற்சி எடுக்கும்போது, ஏற்கனவே செல்போன் வாங்கித் தந்ததைப் பார்த்திட்டு நிறைய பேர் தன்னார்வமா முன்வந்து இந்தக் குழந்தைகளுக்கு வாங்கித் தர்றோம்னு சொன்னாங்க. முதல்ல எங்க பள்ளி அறிவியல் ஆசிரியர் செல்வராஜ் ஆறு செல்போன் வாங்கித் தந்தார். அடுத்து, ஆங்கில ஆசிரியர் சுரேஷ் ரெண்டு செல்போன் வாங்கித் தந்தார். அப்புறம், கயல்விழினு என்னுடைய ஃப்ரண்ட் தனியார் பள்ளியில் ஆசிரியரா இருக்காங்க.

அவங்க ரெண்டு மொபைல் வாங்கித் தந்தாங்க. பிறகு, என்கிட்ட படிச்ச முன்னாள் மாணவர்கள்… அதாவது, நான் 2003ல் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்தேன். அங்க எங்கிட்ட படிச்ச பசங்க இன்னைக்கு நல்ல நிலையில் இருக்காங்க. அவங்க மூணு மொபைல் வாங்கிக் கொடுத்தாங்க. இதுக்குள்ள நான் மொபைல் வாங்கித் தந்த செய்தியைப் பார்த்திட்டு கத்தார்ல வேலை செய்ற பாபுனு ஒருத்தர் என்னுடைய நம்பரை வாங்கிப் பேசினார். அவர், ஒரு மொபைல் போன் வாங்கிக் கொடுத்தார். அவரைப் பார்த்திட்டு அவருடைய நண்பர்கள் வாங்கித் தந்தாங்க. தொடர்ந்து, எங்க பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான தமிழ்ச்செல்வன் சார் பத்து மொபைல்கள் வாங்கித் தந்தார். இப்படியா தமிழ் வழியில் படிக்கிற 26 குழந்தைங்களுக்கும் மொபைல் போன் வந்துச்சு...’’ என்கிறார் ஆசிரியை பைரவி.  ‘‘இப்ப நிறைய பேர் தன்னார்வமா அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு செல்போன் வாங்கித் தர்றோம்னு சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் தோழிகள், நாம படிச்ச பள்ளிக்கும் ஏதாவது செய்னு சொல்றாங்க. எனக்கு சொந்த ஊர் பூலாம்பாடி. பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் இருக்கு. இப்ப நிறைய ஸ்பான்சர் வர்றதால அதை தவிர்க்காமல் நான் படிச்ச பள்ளிக்கும் திருப்பியிருக்கேன். அங்குள்ள பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர்கிட்டயும், பள்ளியின் தலைமையாசிரியர்கிட்டயும் பேசியிருக்கேன். உண்மையில் நான் யார்கிட்டயும் ஸ்பான்சர் கேட்கல. அதுவாக வருது. அதை நல்வழியில் அரசுப் பள்ளிக் குழந்தைங்க பயன்படுத்துணும்ங்கிறதே என் நோக்கம்...’’ உற்சாகமாகச் சொல்கிறார் ஆசிரியை பைரவி.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: குணசேகரன்

Tags : Cellphone, recharge for 16 students in her class at own expense!
× RELATED செல்போனை தாய் பறித்ததால் சிறுவன்...