×

பள்ளிப் பாடம் குறையுமா... பாடத்திட்ட குறைப்பால் 2021ல் நடக்கும் நீட் / இன்ன பிற நுழைவுத்தேர்வுகளில் பிரச்னைகள் ஏற்படுமா...?

நன்றி குங்குமம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்படும்...’’ என்ற மத்திய அரசின் ஆணைதான் சமீபத்திய ஹாட் டாக். ஆனால், தமிழக அரசோ வழக்கம் போல மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாகவும் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ‘‘மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் லட்டு தின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருப்பவர்களில் பலர் புத்தகங்களை மூட்டை கட்டிவிட்டு வயிற்றையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்...’’ என்று கவலையுடன் ஆரம்பித்தார் தமிழ்நாடு பட்டதாரி மாணவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான பேட்ரிக் ரைமண்ட். ‘‘பள்ளிக் கல்வியில் பாதி நாட்கள் ஊரடங்கால் போய்விட்டது. வெறும் 80 முதல் 85 நாட்கள்தான் மீதமிருக்கின்றன. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது அரசு ஒரு குழுவை பள்ளிக் கல்வித்துறை ஆணையத்தின் மூலம் அமைத்து கருத்து கேட்டது. அப்போது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் பாடக்குறைப்பு தொடர்பாகவும் அந்தக் குழு ஆய்வு செய்திருந்தது. ஆனால், ஆகஸ்ட்டிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் குழுவின் சிபாரிசை அறிவிக்கமுடியாமல் போய்விட்டது. பிறகு கடந்த மாதத்தில் அந்தக் குழு மீண்டும் ஒரு சிபாரிசை அரசுக்குக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தக் குழுவில் ஆசிரியர்களோ, கல்வியாளர்களோ இல்லாததுதான் முக்கிய பிரச்னை.

இருந்தாலும் நவம்பரில் பள்ளிகளைத் திறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது...’’ என்ற பேட்ரிக்கிடம் ‘பள்ளிகள் திறந்தால் பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்..?’ என்றோம். ‘‘ஒன்றாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை பாடத்திட்டங்களில் குறைப்பு இருக்கலாம் என்ற செய்திகள் வருகின்றன. ஆனால், இதில் எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் டூதான் முக்கியம். மற்ற வகுப்புகளுக்கு ஒரு காலாண்டின் பாடப்புத்தகம் அடுத்த காலாண்டில் பெரிதாக உதவப்போவதில்லை. எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் டூவில் ஒரு தொடர்ச்சி இருக்கவேண்டும். ஆகவே இந்த வகுப்புகளின் பாடத்தில் குறைப்பு என்பதை பார்த்துப் பார்த்து செய்யவேண்டும். இதற்காகத்தான் எந்தப் பாடங்களை வைத்துக் கொள்ளலாம், எதை நீக்கலாம் என்பதை அனுபமிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்களை வைத்து செய்திருக்க வேண்டும் என்று எங்களைப் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ஆலோசனைக் குழுவில் இருந்தவர்கள் கல்வித்துறை சார்ந்த இயக்குனர்களாகவும், அதிகாரிகளுமாக இருந்தனர். அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பள்ளிப் பாடங்களை எடுத்து வருகிறது. பல மாணவர்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறார்கள். இதில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறைக்கப்பட்ட பாடங்களா அல்லது முழுப்பாடங்களா என்று தெரியாமலேயே அதை மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வருகிறார்கள்.

அரசு தீர்மானமாக, இதுதான் பாடத்திட்டம், இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கும் என ஒரு திட்டத்துடன் செயல்பட்டால் மட்டுமே மாணவர்களைக் குழப்பாமல் இருக்கமுடியும். என்னைப் பொறுத்தளவில் நவம்பர் மாதம் பள்ளிகளைத் திறந்தால்கூட குறைந்தது 40% பாடங்களைக் குறைத்தால்தான் மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்வுகளை வைக்கமுடியும். மே மாதம் தேர்தல் வருகிறது. தேர்வையும் தேர்தலையும் நெருக்கமாக வைத்தால் இரண்டுக்குமே பிரச்னை. அத்துடன் பள்ளித் தேர்வுகளிலும் குழப்பம் நீடிக்கும். எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகளை கொரோனா காலத்தில் நடத்த முடியுமா என்பது சந்தேகமே. ஆகவே பாதியாக குறைக்கப்படும் பாடங்களை இரண்டு தேர்வாக பள்ளிகளிலேயே வைத்து அதில் வரும் சராசரியை தேர்வு மதிப்பெண்ணாக மதிப்பிடுவதே இன்றைய நிலையில் சரியாக இருக்கும். ஒருவேளை கொரோனா முழுவதுமாக ஒழிக்கப்பட்டால் மார்ச் அல்லது ஏப்ரலில் மூன்றாவதாக ஒரு பொதுத்தேர்வை நடத்தலாம்...’’ என்றவரிடம்,  ‘பாடத்திட்டம் குறைப்பால் அடுத்த ஆண்டு நடக்கும் நீட் மற்றும் இன்ன பிற நுழைவுத்தேர்வுகளின்போது பிரச்னைகள் ஏற்படுமா...?’ என்றோம். அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளிலும் பாடத்திட்டங்களைக் குறைப்பதே இதற்கான வழியாக இருக்கும். இதை மத்திய அரசும் கவனம்கொண்டு நடவடிக்கை எடுத்தால்தான் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாகும்...’’ என்கிறார் பேட்ரிக்.

தொகுப்பு: டி.ரஞ்சித்

Tags : School lesson, entrance exam, problem
× RELATED கொரோனாவிற்குப் பின் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!