கொரோனா வைரஸ் சிகிச்சையில் டீகோப்பிளானின் மருந்து மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது :டெல்லி ஐஐடி விஞ்ஞானிகள் அறிவிப்பு!!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் டீகோப்பிளானின் என்ற மருந்து மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது என்று டெல்லி ஐஐடி ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் அறிமுகமாகாத நிலையில், பிற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தும் மருந்துகளை சோதனை ரீதியில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி அனுமதி தரப்பட்டுள்ள 23 மருந்துகளை டெல்லி ஐஐடி ஆராய்ந்துள்ளது.இந்த ஆய்வில் பாக்டீரியா தொற்றுக்காக டீகோப்பிளானின் என்ற மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சையில் நலன் பலனை தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் லோபினாவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகளை விட டீகோப்பிளானின் 20 மடங்கு வரை செயல் திறன் கொண்டது என்கிறார்கள் ஐஐடி பேராசிரியர்கள். இருப்பினும் லேசான, மிதமான மற்றும் தீவிரமான நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்து ஆய்விட்டால்தான் கொரோனாவுக்கு எதிரான டீகோப்பிளானின் மருந்தின் பங்களிப்பு குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என்பதும் அவர்களது கருத்தாக இருக்கிறது. டீகோப்பிளானின் மருந்து ஏற்கனவே அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: