×

கேட் கியூ என்ற புதிய சீன வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது; கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு : ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!!

டெல்லி : கொரோனாவின் தாக்கமே இன்றும் குறையாத நிலையில், கேட் கியூ  என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவிவருவதாக ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வகம் தெரிவித்துள்ளது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த சூழலில் இந்தியாவில் புதிய வைரஸ் ஒன்று பரவிவருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேட் கியூ வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவியுள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேரின் மாதிரியில் இந்த வைரசுக்கான ஆன்டிபாடீஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த வைரஸ் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலேயே பெருமளவு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் இது காணப்படுவதால் இந்த வைரசால் பொதுசமூகம் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாக கருதப்படுகிறது. 3 விதமான கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

Tags : Chinese ,India ,ICMR ,mosquitoes , Cat Q, Chinese Virus, India, Mosquitoes, ICMR, Virology, Laboratory, Warning
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...