விவசாயிகளுக்காக களம் இறங்கிய ஸ்டாலின்

சென்னை: கொரோனா பாதிப்பு முழுமையாக விலகாத நிலையில், மத்திய அரசின் விவசாயிகளுக்கு பாதகமான வேளாண் சட்டத்தை எதிர்த்து நேற்று நடந்த போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து 188 நாட்களாக சென்னை தவிர்த்து வெளியிடங்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத மு.க.ஸ்டாலின், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் எல்லாவற்றையும் கடந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சை துண்டு பச்சை மாஸ்க்: காஞ்சிபுரம் ஆர்ப்பாட்டத்தில், அரசின் விதிகளை முழுமையாக பின்பற்றி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 100 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மு.க.ஸ்டாலின், பச்சை நிற மாஸ்க் துண்டு அணிந்தார். மு.க.ஸ்டாலினுக்கு, பாதுகாப்பாக வந்தவர்களும் அதேபோன்று இருந்தனர். மேலும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றினர். அவர்கள் அணிந்து இருந்த முகக் கவசத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெறு என்ற வாசகமும் இருந்தது.

* களைபறித்த பெண்களுடன் கலந்துரையாடல்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலின், கீழம்பியில் திடீரென வெறுங்காலில் வயலில் இறங்கி களை பறித்துக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினார்.. வேளாண் சட்டம் விவசாயிகளை தங்கள் சொந்த நிலத்திலேயே கூலிகளாக்க மத்திய அரசு கொண்டு வரும் திட்டம், இதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் பலனடையவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது என விளக்கி கூறினார். பின்னர் அவர்கள், மூன்று போகம் விளையக்கூடிய இந்தப் பகுதிகளில் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது தற்போது சிரமமாக உள்ளது. இதனால் விவசாயம் நலிந்து வருகிறது என தெரிவித்ததுடன், நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Related Stories:

>