×

செங்கல்பட்டு அதிமுக பிரமுகர் கொலையில் ஊராட்சி தலைவரை கொன்றதால் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டினோம்: சரணடைந்தவர்கள் திடுக் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த செல்வி நகரை சேர்ந்தவர் சேகர் (45). கடந்த 2012ம் ஆண்டு, பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கொலை வழக்கில் சேகரை, போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர், தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் அதிமுகவில் இணைந்த அவர், செல்வி நகர் நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது நண்பர் சக்கரவர்த்தி. அதே பகுதியில் வீடு கட்டியுள்ளார். நேற்று முன்தினம் மதியம் சேகர், சக்கரவர்த்தி, கட்டியுள்ள வீட்டை பார்க்க சென்றார். சுமார் 2 மணியளவில், இருவரும் அங்குள்ள மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 8 பேர், சேகரை சரமாரியாக வெட்டி கொலை செய்து, அவரது தலையை வெட்டி சாலையோரம் வீசி சென்றனர். புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் பொன்விளைந்த களத்தூரை சேர்ந்த சுரேஷ் (38), செங்கல்பட்டு மணிகண்டன் (19), சுண்ணாம் புகார தெரு மொய்தீன் (19), கேகே தெரு பாபு (24), ஆலவாய் மாரியம்மன் கோயில் தெரு மகேஷ் (30), மேட்டு தெரு கௌதம் (25) ஆகியோர் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி தலைவராக விஜயகுமார் 2வது முறையாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான குப்பன், மாவட்ட கவுன்சிலராக மாமல்லபுரத்தில் போட்டியிட்ட குப்பனின் மனைவி குப்பு ஆகியோர் தோல்வியடைந்தனர்.

இதனால் ஆத்திர மடைந்த குப்பன், கூலிப்படை மூலம் 2012ல் விஜயகுமாரை கொலை செய்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குப்பன், அவரது மகன் நித்யானந்தம், தேமுதிக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துரைதாஸ், புதுப்பாக்கம் சேகர், பங்க் வெங்கடேஷன், உமாபதி, ரவி உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடினர். அதே நேரத்தில், விஜயகுமாரை கொலை செய்தவர்களை பழிவாங்க, அவரது தம்பி சுரேஷ் திட்டமிட்டார். அதன்படி 2013ம் ஆண்டு மறைமலைநகரில் குப்பனை வெட்டி கொலை செய்தார். 2014ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் குப்பனின் மகன் நித்தியானந்தம், பொன்விளைந்த களத்தூரில் துரைதாஸ் ஆகியோரை சுரேஷ் கோஷ்டி கொலை செய்தது. இதையொட்டி சேகரையும் தீர்த்து கட்டினோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, கொலை நடந்த இடத்தில் நடித்து காட்டுவதற்காக அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தூத்துக்குடியை சேர்ந்த கும்பல், சேகரை கொலை செய்தது பதிவாகி இருந்தது. சேகரை, தூத்துக்குடி நபர்கள் கொலை செய்தபோது, சரண் அடைந்தவர்கள் யார், அவர்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், வேறு யாரேனும் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும் சேகரின் நண்பரான சக்கரவர்த்தியிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : killing ,Surrenders ,AIADMK ,Chengalpattu AIADMK , Chengalpattu AIADMK leader's murder: Panchayat leader killed in retaliation: Surrenders shocked
× RELATED பாஜ பிரமுகருக்கு கத்திக்குத்து