×

மெரினா காமராஜர் சாலையில் சிறுமி ஓட்டி வந்த மொபட் மோதி எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி: 5 பேர் படுகாயம்

சென்னை: சென்னை எம்ஆர்சி நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் லெனின் (39). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர், தற்போது சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் சென்னை வந்த லெனின் தனது உறவினர்களான சுரேஷ்பாபு (32) மற்றும் இந்திரா ஆகியோருடன் ஒரே பைக்கில் மெரினா காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் அதிவேகத்தில் மொபட் ஒன்று வந்தது. அதில் 15 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன், 13 வயது சிறுமி ஆகியோர் வந்தனர்.

அதிவேகம் காரணமாக சிறுமி ஓட்டி வந்த மொபட் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த பாதுகாப்பு படை வீரர் லெனின் பைக் மீது மோதியது. இதில் பைக் மற்றும் மொபட்டில் வந்த 6 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அதில் பாதுகாப்பு படை வீரர் லெனினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மற்ற அனைவரும் படுகாயங்களுடன் அலறி துடித்தனர். தகவல் அறிந்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய லெனின் மற்றும் 5 பேரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துமவனைக்கு அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லெனின், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் மொபட் கொடுத்த அவரது தந்தையை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தால் சிறிது நேரம் மெரினா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Border Security Force ,soldier ,collision ,Marina Kamaraj Road , Border Security Force soldier killed, 5 injured in moped collision with girl on Marina Kamaraj Road
× RELATED 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை