×

ஆண்டுக்கு இருமுறை செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த தவறினால் 2% அபராதம்: மாநகராட்சி அதிரடி

சென்னை: அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை முறையாக செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள மன்ற தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி தொகை செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய நிகர சொத்துவரி தொகையுடன் கூடுதலாக ஆண்டிற்கு 2 சதவீதம் மிகாமல் தனிவட்டியுடன் அபராதம் விதித்து வசூலிக்கப்படும்.

சொத்து உரிமையாளரால் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் விளைவாக, மாநகராட்சிக்கு உரிய நிலுவைத் தொகை ஏதேனும் செலுத்தப்பட வேண்டியிருப்பின், ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 15 தினங்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட தொகையினை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஆண்டிற்கு இரண்டு சதவீதம் தனி வட்டியுடன் செலுத்த வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டு துவக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள், அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளும், செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி தொகையினை செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, செலுத்தப்படும் நிகர சொத்து வரியில் ஐந்து சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5000) ஊக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை செலுத்துமாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : 2% penalty for failure to pay property tax due twice a year: Corporation Action
× RELATED வராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்