உமாபாரதிக்கு கொரோனா தொற்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு நாளை தீர்ப்பு அறிவிப்பு

டேராடூன்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜ மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா தொற்று ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. திட்டமிட்டபடி செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும், அன்று குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் சம்மந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். இந்நிலையில் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நேற்று அவர் தனது டிவிட்டரில் கூறி உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சலும் அதிகமாக உள்ளது. எனினும், மருத்துவர்கள் அனுமதி கொடுத்தால் நாளை மறுதினம் சிபிஐ நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜராவேன்’’ என கூறி உள்ளார். 28 ஆண்டாக நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் உமாபாரதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மாட்டார் என கூறப்படுகிறது.

Related Stories: