வரும் 4ம் தேதி நடக்க உள்ள யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘வரும் 4ம் தேதி நடக்க உள்ள யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது’ என்று மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 72 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 6 லட்சம் பேர் யுபிஎஸ்சி தேர்வை எழுத உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தொற்று பரவல் மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தீவிர மழை காரணமாக தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் முன்னிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யுபிஎஸ்சி தரப்பில் தேர்வை தள்ளி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. யுபிஎஸ்சி தரப்பு வக்கீல் தனது வாதத்தில், ‘‘இந்த தேர்வு கடந்த மே மாதம் 31ம் தேதியே நடந்திருக்க வேண்டும். கொரோனா காரணமாகவே அக்டோபர் 4ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இனியும் தாமதம் செய்ய முடியாது. தேர்வுக்கான அடையாள அட்டையும் எெலக்ட்ரானிக் முறையில் விநியோகிக்கப்பட்டுவிட்டது. அனைத்து காரணிகளையும் ஆராய்ந்தே, தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: