மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு கொரோனா கட்டிப்பிடி அச்சுறுத்தல்; பாஜ தேசிய செயலாளர் மீது வழக்கு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொரோனா கட்டிப்பிடி அச்சுறுத்தல் விடுத்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாஜ தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் போல்பூர் முன்னாள் எம்பி அனுபம் ஹஸ்ரா. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பாஜவில் இணைந்தார், இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜவின் புதிய தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேசிய அனுபம் ஹஸ்ரா கூறுகையில், “ எனக்கு கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் நான் நேரடியாக முதல்வர் மம்தாவிடம் செல்வேன். அவரை கட்டிப்பிடித்து அவருக்கு நோய் தொற்று பாதிப்பை ஏற்படுத்துவேன்.

அப்போது தான் நோய் தொற்றினால் பாதித்துள்ள மக்களின் வலி மற்றும் அன்புக்குரிய மற்றும் நெருங்கியவர்களை கொரோனாவினால் இழக்கும்போது ஏற்படும் வேதனை அவருக்கு புரியும்” என்றார். பாஜ தேசிய செயலாளரின் இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு பெண் மற்றும் மாநில முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து கூறியதாக அனுபம் மீது சிலிகுரி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜ தேசிய செயலாளர்  அனுபம் ஹஸ்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: