வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: ‘வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன் தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் அடுத்த இரண்டொரு நாளில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்’ என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வங்கியில் வாங்கிய கடன்களை திருப்பிக் கட்ட வாடிக்கையாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31ம் தேதிவரை 6 மாதம் ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது. இந்த வங்கி கடன் இ.எம்.ஐ சலுகையை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆறு மாதங்களாக கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கணக்குகளை வங்கி வாராக்கடன் பட்டியலில் இணைக்கக் கூடாது என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டதோடு, இந்த விவகாரத்தில் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கூடுதல் அவகாசம் கேட்கக் கூடாது என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில், “வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் அரசு தரப்பில் எந்தவிதமான பணிகளை மேற்கொள்வது என்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருசில அம்சங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இருப்பினும் ஒரு மேம்பட்ட கட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்த விவகாரம் என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். அவரசப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிட்டால் பல பொருளாதார சிக்கல் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பூஷன், ‘‘மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கலாமா என்பது குறித்து மனுதாரர் தான் தெரிவிக்க வேண்டும்’’ என கூறினார். ‘‘நீண்ட அவகாசம் வழங்க வேண்டாம். இதில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என மனுதாரர் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் பதிலளிக்கப்பட்டது.  இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வங்கி வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றமும் ஏற்றுகொள்கிறது. அதற்காக அதிக அவகாசம் வழங்க முடியாது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஒரு முடிவை மேற்கொள்ளுங்கள்.

குறிப்பாக வரும் வியாழக்கிழமைக்குள் அதுதொடர்பான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். மேலும் அரசால் எடுக்கப்படும் முடிவுகளை ஆலோசர்களுக்கு தெரிவிக்கலாம்’’ என்றனர். இதற்கு மத்திய அரசு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, வாராக்கடன் வசூலிக்கும் விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: