யூ-டியூபில் பெண்களை ஆபாசமாக பேசியவரை ஆயில் பூசி அடித்து விளாசிய டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி: கேரள அமைச்சர் ஷைலஜா பாராட்டு

திருவனந்தபுரம்: யூ-டியூப் சேனலில் ஆபாசமாக கருத்துக்களை தெரிவித்த விஜய் பி.நாயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கரி ஆயில் பூசி அவரை அடித்து விளாசிய பாக்யலட்சுமி உட்பட 3 பேரையும் அமைச்சர் ஷைலஜா பாராட்டினார். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஜய் பி.நாயர். யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பிரபல சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி தலைமையில் 3 பெண்கள் விஜய் பி.நாயர் வீட்டிற்கு சென்று அவர் மீது கரி ஆயிலை ஊற்றி, அவரை சரமாரியாக அடித்தனர். அவரது வேட்டியை பிடித்து இழுத்து கன்னத்தில் பளார், பளார் என அறை விட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விஜய் பி.நாயர் தம்பானூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டப்பிங் கலைஞர் பாக்கிய லட்சுமி, செயல்பாட்டாளர்களான தியா சனா, லட்சுமி ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், ‘‘பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வந்த விஜய் பி.நாயரின் செயல் மிகவும் மோசமானது. அவரை தட்டிக்கேட்ட பாக்யலட்சுமி உள்பட 3 பேருக்கும் பாராட்டுக்கள். அவர்களின் எதிர்ப்பு முறையில் உள்ள தவறுகளை பற்றி பின்னர் சிந்திப்போம். இதுபோன்றவர்களுக்கு எதிராக போராட பொதுமக்கள் முன்வர வேண்டும். இதுபோன்ற சேனல்களை நாம் ஆதரிக்கக்கூடாது. அவற்றின் பதிவுகளையும் பகிரக்கூடாது’’ என்றார்.

போலி டாக்டர் பட்டம்

விஜய் பி.நாயர் தனது பெயருக்கு முன் டாக்டர் என போட்டிருந்தாலும், அவரது பிஎச்டி போலியானது என்ற புகார்கள் உள்ளன. யுஜிசி அங்கீகாரம் பெறாத சென்னையை ேசர்நத ஒரு பல்கலையின் பட்டத்தை அவர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தான் மருத்துவ உளவியல் பிஎச்டி பெற்றதாக விஜய் பி.நாயர் கூறி உள்ளார். இதுதொடர்பாக, இந்திய மருத்துவ உளவியலாளர்கள் சங்கம் சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த யூடியூப் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனும் கூறி உள்ளார்.

Related Stories: