கொரோனாவிலும் கொள்ளையடிக்கிறது பாஜக-அதிமுக அரசுகள் விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் ஓயாது

சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* மத்திய அரசு கொண்டு வரும் மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம்.

* பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வாக்குறுதிகள் வழங்குவது வழக்கம். ஆனால், அந்த வாக்குறுதிகள் அவருக்கே மறந்து போயிருக்கும்.

* ஒட்டுமொத்த மக்கள் விரோத ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதற்கு மாநில அரசு தலையாட்டுகிறது. அடிமைச் சேவகம் செய்து வருகிறது.

சென்னை: விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டங்கள் ஓயாது என்றும், இச்சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய பாஜ அரசு நிறைவேற்றியுள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்-அதற்கு துணை போகும் அதிமுக அரசைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், காஞ்சிபுரம் கீழம்பி கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயத்தை முன்னேற்றப் போவதாக சொல்லும் மூன்று சட்டத்தால் விவசாயிகள் பின்தங்கி விடுவார்கள். நிலத்தில் இருந்து துரத்தப்படுவார்கள். அதனால்தான் அந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம். மத்திய அரசு எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவும்-திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்க்கின்றன என்று சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம். இந்த விவசாயச் சட்டங்களை நாம் மட்டுமா எதிர்க்கிறோம்; இந்தியாவே எதிர்க்கிறது-போராடுகிறது. வேளாண் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய கேரள அரசு தயாராகி வருகிறது. பக்கத்தில் இருக்கும் மாநிலம் நீதிமன்றத்துக்குச் செல்வதைப்போல தமிழக அரசும் நீதிமன்றம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால் அதைச் செய்யத் தமிழக அரசு முன்வரவில்லை. தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம். தன்னை “விவசாயி, விவசாயி” என்று சொல்லும் எடப்பாடி விவசாயி அல்ல; விவசாயி என்று சொல்லி ஏமாற்றும் ‘விஷவாயு’’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன். ஸ்டாலினுக்கு விவசாயம் என்ன தெரியும் என்கிறார். நான் விவசாயி, விவசாயி என்று கூறித் திரியவில்லையே. விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படும்போது துணை நிற்பவன் தான் இந்த ஸ்டாலின்.  எடப்பாடி தான் கிஸான் திட்டத்தில் உருவான ‘போலி விவசாயி’-யாக வலம் வருகிறார்.  

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வாக்குறுதிகள் வழங்குவது வழக்கம். ஆனால், அந்த வாக்குறுதிகள் அவருக்கே மறந்து போயிருக்கும். கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்-வெளிநாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப்பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவருக்கும் ₹15 லட்சம் தருவேன் என்றார்.  15 லட்சம் அல்ல, 15,000, அட 15 ரூபாய், 15 பைசா கூட தரவில்லை. ஒரு பக்கம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்து இந்தியர்களையே குடியுரிமை இல்லாதவர் ஆக்குகிறார்கள். இன்னொரு பக்கம் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து அனைவரும் சுதந்திரமாக கல்வி பயில்வதைத் தடுக்கிறார்கள். தலைவர் கலைஞரின் சமச்சீர்க்கல்வியைச் சின்னாபின்னமாக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை, அனைவரும் படிப்பதைத் தடைசெய்கிறது. மற்றொரு பக்கம் வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகளை நிராயுதபாணியாக மாற்றப் போகிறார்கள்.

ஒட்டுமொத்த மக்கள் விரோத ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதற்கு மாநில அரசு தலையாட்டுகிறது. அடிமைச் சேவகம் செய்து வருகிறது.  தமிழகத்தில் கொரோனா நுழைந்ததில் இருந்து மாதந்தோறும் ₹5000 தர வேண்டும் என்று சொல்லிவருகிறேன். 6 மாதமாகவே சொல்லி வருகிறேன். ஆனால் தமிழக அரசு தரவில்லை. இந்த லட்சணத்தில் இந்தச் சட்டம் தேவையா? மாநிலங்களவையில் நடந்தது ஜனநாயகப் படுகொலை. வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் மெஜாரிட்டி கிடைக்காது.  அமளியை, குழப்பத்தை ஏற்படுத்தி மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் செய்தியும் வந்திருக்கிறது. ொரோனா காலத்தில் இந்தக் கொடுமையான சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் ஆட்சி, இந்த ஆட்சி.

கொரோனாவை தடுக்க பொருள்கள் வாங்குவதிலும், குறிப்பாக தூய்மைப்பணியாளர்களுக்குத் துடைப்பம், சானிடைசர், பிளீச்சிங் பவுடர் போன்ற பொருள்களை வாங்குவதிலும் ஊழல் செய்யும் ஆட்சி இது. இதைத் துரத்தியடிக்க வேண்டும். கொரோனா காலத்திலும் கொள்ளை அடிக்கும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். மிகச்சிறிய அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். நிச்சயம் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்.

Related Stories: