முதல்வர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம் அதிமுகவுக்கு துரோகம் செய்தது ஓபிஎஸ்: செயற்குழுவில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

* சீனியர்கள் எதிர்ப்பால் முடிவெடுக்காமல் முடிந்தது கூட்டம்

* 7ம் தேதி அறிவிக்கப்படும் என கே.பி.முனுசாமி தகவல்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அப்போது அதிமுகவுக்கு துரோகம் செய்தது நீங்கள்தான் என நேரடியாகவே முதல்வர் குற்றம்சாட்டியதால் பரபரப்பு நிலவியது. இதனால் 5 மணி நேரம் நடந்த கூட்டத்தில் முதல்வர் விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், `ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் சமரசத்தையடுத்து, அதிமுகவில் யாரும் இனி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதை ெதாடர்ந்து கடந்த 18ம் தேதி அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நேரடியாக வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வருகிற 28ம் தேதி (நேற்று) அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 298 பேர் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அழைப்பு கடிதம் பெற்ற அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிமுக கட்சி அலுவலகம் அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அமர வைக்கப்பட்டனர். கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பேசும் காட்சிகள் பெரிய டிவி திரை மூலம் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 9.45 மணிக்கு வந்தனர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் தனித்தனியாக திரண்டு வாழ்க கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர்கள் காலை 9 மணியில் இருந்தே வர தொடங்கினர். அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிமுகவில் கோஷ்டி மோதல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நேற்று நடைபெறும் செயற்குழு கூட்டம் தமிழக அரசியலில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி பேசினர். அதேபோன்று, 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவையும் நியமிக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், `என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு நான் விசுவாசமாக இருந்ததால்தான் என்னை முதல்வர் ஆக்கினார். ஆனால், உங்களை (எடப்பாடி) முதல்வர் ஆக்கியது சசிகலா. தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே நான் துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். கட்சியில் எந்த முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் என்றாலும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுதான் எடுக்க வேண்டும் என்று பொதுக்குழு முடிவு செய்தது. அதன்படி அந்தக்குழுவை அமைக்க வேண்டும். அந்தக்குழுதான் முடிவுகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான். முதல்வராக நான் சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமர் மோடியே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டி உள்ளார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன் என்று கூறுகிறீர்கள். நாங்களும்தான் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தோம்.

அதனால்தான் அவர் மறைந்த பிறகும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முடிந்தது. ஆனால் நீங்கள்தான் (ஓபிஎஸ்) 12 அதிமுக எம்எல்ஏக்களுடன் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சியுடன் இணைந்து செயல்பட்டீர்கள். அதனால் விசுவாசம் பற்றி இனி நீங்கள் பேசக்கூடாது” என்றார். இருவரின் வார்த்தை மோதல்களால் கூட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து கே.பி.முனுசாமி எம்பி பேசும்போது, “2017ம் ஆண்டு பொதுக்குழுவில் முடிவு செய்தபடி முதலில் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அதன்பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்து பேசலாம்’’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் தங்கமணி, 11 பேர் குழு பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம். 2 பேராக (இபிஎஸ்-ஓபிஎஸ்) இருந்து எந்த முடியும் எடுக்க முடியாதபோது 11 பேர் கொண்ட குழுவால் என்ன முடிவு எடுக்க முடியும்? இதனால் கூடுதலாக குழப்பம்தான் வரும்’’ என்றார். அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல்வர் எடப்பாடி சிறப்பாக செயல்பட்டு ஆட்சியை நீடிக்க வைத்தார். கொரோனா காலத்தில் எந்தவித பயமும் இல்லாமல் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்’’ என்றார்.

அமைச்சர் காமராஜ் பேசும்போது, `குடிமராமத்து பணிகள் உள்பட விவசாயிகளுக்கு  நிறைய திட்டங்களை முதல்வர் எடப்பாடி கொண்டு வந்துள்ளார்’’ என்றார். முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது, `முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தே ஆக வேண்டும். கடந்த 4 வருடம் அவர் மிகவும் திறமையாக ஆட்சியும் செய்துள்ளார்’’ என்று கூறினார். அதே கருத்தை எம்எல்ஏக்கள் விருகை ரவி, தி.நகர் சத்யா ஆகியோரும் வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று நடுநிலையாக பேசியுள்ளார். அதேபோன்று, வைத்திலிங்கம் எம்பியும், முதல்வர் வேட்பாளர் குறித்து எதுவும் பேசாமல் வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

மொத்தத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் பேசிய 90 சதவீதம் பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே பேசினர். இதனால் எடப்பாடி அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேநேரம் எடப்பாடி ஆதரவாளர்கள், செயற்குழு கூட்ட முடிவில், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தே ஆக வேண்டும் என்ற வகையில் திட்டமிட்டு செயல்பட்டனர். அதற்கான நெருக்கடியும் அவர்கள் அளித்தனர். ஆனால், மேடையில் இருந்த 4 பேரில், 3 பேர் அதாவது ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க விருப்பம் இல்லாமல் இருந்தனர். மெஜாரிட்டி ஆதரவு இருந்தும், 3 மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி அறிவித்தால், கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்து, கட்சி மீண்டும் உடையும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. டெல்லி பாஜ தலைவர்கள், இந்த விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தராமல் உள்ளனர்.

இதனால் கூட்டம் நடைபெறும்போதே மூத்த தலைவர்கள் மட்டும் தனியாக சென்றனர். அப்போது நடந்த ஆலோசனையின்போது, மனுக்கள் குழுவில் இடம்பெற்றுள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய 5 பேர் குழுவினர் வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி இறுதி முடிவு எடுப்பார்கள். அதன்படி, வருகிற 7ம் தேதி (புதன்) மீண்டும் அதிமுக கட்சி அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் கூடி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடிவு செய்யலாம் என்று முடிவு எடுத்தனர். அதை கூட்டதிலும் அறிவித்தனர். மேலும், நேற்று நடந்த செயற்குழு கூட்டத்திலும் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக செயற்குழு கூட்டம் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 வரை (5 மணி நேரம்) நடைபெற்றது. ஆனாலும் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றியோ, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பது பற்றியோ அதிகாரப்பூர்வமான எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்தது.

செயற்குழு கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தேர்தல் நெருங்கும் வேளையில் அ.தி.மு.க. தலைமையில் இயங்குகின்ற கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வருகிற 7ம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து, இதே தலைமை கழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்பார்கள் என்றார்.

மறைந்த முன்னாள் அதிமுக சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்பட 300 பேர் மற்றும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களுக்கும் செயற்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

போட்டி போட்டு பதாகை

முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதத்துக்கு இடையே அதிமுக செயற்குழு நேற்று ராயப்பேட்டையில் கூடியது. முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ‘2021ல் மீண்டும் முதல்வர், மக்களின் சாமானிய முதல்வர்’’ என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ‘அம்மா தந்த முதல்வர், வருங்கால முதல்வர்’’ என்ற பதாகையுடன் போட்டி போட்டு கோஷமிட்டதால் ராயப்பேட்டையில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>