விடுமுறை நாளில் ஜாலியாக இருப்பதற்காக ‘மசாஜ்’ சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி கடத்தல் : நள்ளிரவில் மீட்பு; பெண் உட்பட 3 பேர் கும்பல் கைது

புதுடெல்லி,:டெல்லியில் விடுமுறை நாளில் ஜாலியாக இருப்பதற்காக ‘மசாஜ்’ சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி நேற்று முன்தினம் கடத்தப்பட்டார். போலீசார் அவரை நேற்றிரவு மீட்டனர். பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர். டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) அலுவலகத்தில் பணியாற்றும் இளம் விஞ்ஞானி ஒருவர் நொய்டா குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த இளம் விஞ்ஞானி கடத்தப்பட்டதாகவும், ரூ. 10 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீஸ் கூடுதல் கமிஷனர் குமார் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர்.

அதன் தொடர்ச்சியாக கடத்தல் கும்பலை கண்டுபிடித்து, நேற்று நள்ளிரவு அந்த இளம் விஞ்ஞானியை மீட்டனர். மேலும், பெண் உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் கமிஷனர் குமார் கூறுகையில், ‘அந்த இளம் விஞ்ஞானி, விடுமுறை நாளில் ஜாலியாக இருப்பதற்காக சமூக வலைதளத்தின் மூலம் மசாஜ் சென்டர் தொலைபேசி எண்ணைத் தேடி கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். சனிக்கிழமையன்று, மசாஜ் மையத்திலிருந்து வந்த ஒரு நபர், அவரை அழைத்துக் கொண்டு மசாஜ் செய்வதற்காக நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு திடீரென வந்த சிலர், தங்களை போலீஸ் எனக் கூறி, அந்த இளம் விஞ்ஞானியை மிரட்டினர்.  

பின்னர் அவர்கள் அவரை ஓட்டல் அறையில் பிணைக் கைதியாக அழைத்துச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். குடும்பத்தார், கடத்தில் கும்பலிடம் பேரம் பேசி வந்தனர். இந்த தகவல் போலீசுக்கு நேற்றிரவு தெரிந்தது. உடனடியாக இந்த ஓட்டலில் சோதனை நடத்தி ஒரு பெண் உட்பட மூன்று குற்றவாளிகளை கைது செய்தோம். மேலும், சிலர் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக விஞ்ஞானியை கடத்திச் சென்றது தொடர்பாக டிஆர்டிஓ தலைமையகத்திலிருந்து நொய்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அடுத்தடுத்த சோதனைகளை தொடர்ந்து, நள்ளிரவில் இளம் விஞ்ஞானி மீட்கப்பட்டார்’ என்றார்.

Related Stories: