மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கொதித்தெழ வேண்டும்: வைகோ ஆவேசம்

துரைப்பாக்கம், :மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்து, சென்னை கந்தன்சாவடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை வகித்து பேசியதாவது:விவசாயிகளை பாதுகாக்கவும்,  மத்திய அரசின் சட்டங்களை எதிர்க்கவும், மாநில அரசின் துரோகத்தை அம்பலப்படுத்தவும்  இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 ஆண்டுகளாக பாஜ  தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த அகாலி தளம் கட்சி நேற்று விலகியுள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்படும் சட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால் யாரிடமும் கேட்காமல் அவசரமாக இந்த சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சட்டத்தால்  விவசாயிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.  பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களை  வாழ வைப்பதற்காக  இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதாரவிலை இந்த சட்டங்களில் இல்லை. இதனால் மக்களும், விவசாயிகளும், சிறு வணிகர்களும் பாதிக்கப்படுவார்கள். 1966ல் ஒப்பந்த சாகுபடி சர்க்கரை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த 15 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும். இந்தியா முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை ₹15 ஆயிரத்து  683 கோடி.  தமிழக விவசாயிகளுக்கு ₹1736 கோடி. இதனால் விவசாயிகள் வாழ முடியாத சூழ்நிலையுள்ளது.

இந்த சட்டத்தால் ரேஷன், விற்பனை தொழிற்கூடங்கள், உழவர் சந்தைகள் இருக்காது.  விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் கொதித்து எழவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், சந்திரசேகர், ஐஜேகே கட்சி பிரமுகர் ரவிபச்சை முத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  நிர்வாகி முஸ்தபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விடுதலை செழியன், மதிமுக நிர்வாகி கழக குமார்,  பாலவாக்கம் சோமு,  சென்னை மேற்கு பகுதி செயலாளர் எஸ்.பி.ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: