மக்களவை தேர்தலில் போட்டியிட்டது போன்று பீகாரில் ஐஜத-பாஜக இடையே 50:50 பார்முலா : அமித் ஷாவிடம் பஞ்சாயத்துக்கு சென்றது லோக் ஜனசக்தி

பாட்னா, :மக்களவை தேர்தலில் போட்டியிட்டது போன்று ஆளும் ஐஜத-பாஜக இடையே 50:50 பார்முலாவின்படி சீட் ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதேநேரம் இந்த உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமித் ஷாவிற்கு லோக் ஜனசக்தி தலைவர் கடிதம் எழுதி உள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் மகா கூட்டணி இடையே சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. வரும் அக். 1ம் தேதி 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பு மனுக்கள் தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி மற்றும் ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகியவை உள்ளன.

இவர்களுக்குள் சீட் ஒதுக்கீடு பிரச்னை நீடிப்பதால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ேலாக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சீட் ஒதுக்கீடு தொடர்பாக, முதல்வர் நிதிஷ் குமாருக்கும் தங்களது கட்சிக்கும் உள்ள பிரச்னையை தீர்த்து வைக்குமாறு கோரியுள்ளார். மாநிலத்தின் மொத்தமுள்ள 243 இடங்களில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 100 இடங்களில் போட்டியிடுகின்றன.

மீதமுள்ள 43 இடங்களை லோக் ஜனசக்தி, ஜிதன்ராம் மஞ்சி கட்சிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்படுத்திக் கொண்ட 50:50 பார்முலா அடிப்படையில், பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் சீட்டை பகிர்ந்து கொள்கின்றன. லோக் ஜனசக்தி கட்சி குறைந்தது 25 முதல் 30 இடங்களை கேட்கிறது. மஞ்சியின் கட்சி 8 இடங்களை கேட்கிறது. ஆனால், அதற்கு ஐக்கிய ஜனதா தளம் உடன்படவில்லை. இதற்கிடையே மற்ற உதிரி கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாததால், மஞ்சி ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். இப்போது முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவும் கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 243 இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 150, காங்கிரஸ் 65, கூட்டணி கட்சிகளுக்கு 28 இடங்கள் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில், இடதுசாரிக் கட்சிகள் இணையும் என்றும், உபேந்திர குஷ்வாஹா கூட்டணியில் நீடித்தால், அவரது கட்சிக்கு பத்து இடங்கள் வரை ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தும், கூட்டணிக்குள் சீட் ஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories:

>