கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்காவில் பீதி : மூளையை உண்ணும் அமீபா தாக்கி குழந்தை பலி; குழாய் நீரைப் பயன்படுத்த டெக்சாசில் தடை

வாஷிங்டன்: கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபா தாக்கி குழந்தை பலியானதால், குழாய் நீரைப் பயன்படுத்த ெடக்சாசில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயின் அழிவுக்கு மத்தியில், மூளையை உண்ணும் நுண்ணுயிரியான அமீபா தொற்று அமெரிக்காவை கலங்கடித்து வருகிறது. பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் அமீபாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டெக்சாஸ் மாநில மக்களிடம், ‘விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடிக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் டெக்சாஸில் உள்ள ஜாக்சன் ஏரி நீரை குடித்த ஒரு குழந்தை அமீபா தொற்றால் இறந்துள்ளது. விசாரணையில், விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியான அமீபா இருந்தது கண்டறியப்பட்டது.

முன்னதாக கடந்த 8ம் தேதி டெக்சாஸ் மருத்துவமனையில் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு ​​அமீபா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் அந்த குழந்தை அமீபா தாக்கி பலியானது. இதையடுத்து, குடியிருப்பாளர்களுக்கு குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதில், ‘வாய் மற்றும் மூக்கு வழியாக நீர் உடலில் நுழைய அனுமதிக்க கூடாது. ஜாக்சன், ப்ரீபோர்ட், ஆங்கிள்டன், பிரசோரியா, ரிச்வுட், சிப்பி  க்ரீக், க்ளூட் மற்றும் ரோசன்பெர்க் ஆகிய ஏரி நீரை குடிக்க கூடாது’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ‘அமீபா என்ற நுண்ணுயிர் தொற்று மூக்கு வழியாக மூளையை அடைகிறது. இந்த அமீபா நுண்ணுயிரி மூளையை உண்ணக் கூடியது. இந்த அமீபாவின் பெயர் நெகலேரியா ஃபோலர்லீ என்று அழைக்கப்படுகிறது. இது மூளையில் ஆபத்தான தொற்றுநோய்களை ஏற்படுத்தும். மூக்கு வழியாக மூளைக்கு சென்று, அங்கிருந்து உடலின் அனைத்து பகுதிக்கும் ெசல்கிறது. குடிநீர் விநியோகத்தில் காணப்படும் இந்த அமீபா தொற்று பாதிப்பு புதியது அல்ல. 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தெற்கு லூசியானாவில் அமீபா தொற்று தாக்கி இறப்புகள் நடந்தன. அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின் தகவல்படி, இந்த மூளை உண்ணும் அமீபா, ஏரிகள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் காணப்படுகிறது’ என்றனர்,

Related Stories: