பிரசவம் நடந்த சில மணி நேரத்தில் தாய், குழந்தை பரிதாப சாவு சுகாதார நிலையம் முற்றுகை

ராணிப்பேட்டை, :பிரசவம் ஆன சில மணி நேரத்தில் தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(23), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அர்ச்சனா(19). திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அர்ச்சனாவுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால் அவரை ராணிப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அங்கிருந்த 2 நர்ஸ்கள் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர் அர்ச்சனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர். அதிகாலை 3.30 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நிமிடங்களில் குழந்தை இறந்தது. தொடர்ந்து அர்ச்சனாவுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில் அர்ச்சனாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த அர்ச்சனாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இன்று சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, சடலங்களை மருத்துவமனையின் வாசலில் வைத்து மருத்துவ ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.தகவலறிந்த ராணிப்பேட்டை  போலீசார் அங்கு வந்து சமரசம் செய்ய முயன்றனர்.அப்போது அர்ச்சனாவின் உறவினர்கள், சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க டாக்டர் இல்லை. நர்ஸ்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். அவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. அர்ச்சனாவை வாலாஜா அல்லது வேலூர் அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்கு அனுப்பியிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆவேசமாக கூறினர்.தகவலறிந்த ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி வந்து, அர்ச்சனாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  இதற்கிடையில் குழந்தை மற்றும் அர்ச்சனாவின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் போலீசார் அனுப்பி வைக்க முயன்றனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>