பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை : கஞ்சா, போதை ஊசி விற்ற 5 பேர் கும்பல் அதிரடி கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, போதை ஊசி சப்ளை செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சா, போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளனர். இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில், வடசேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளீஸ்வரி தலைமையில் நேற்று மாலை வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தியவர்கள், அதில் இருந்து இறங்கி தப்ப முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட போலீசார் 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். 2 பேர் தப்பினர். பிடிபட்ட காரில் சோதனை நடத்தினர். அதில் கஞ்சா, போதை ஊசி மருந்துகள் இருந்தது தெரிய வந்தது. காரை பறிமுதல் செய்து அதில் இருந்தவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பாலகிருஷ்ணன் (55), சரவணன் (23), மணிகண்டன் (33), கார்த்திக் ராஜா (31), கண்ணன் (46) என்பது தெரிய வந்தது.

5 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 2.25 கிலோ கஞ்சா, போதை ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சேகர், சரத் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.

இவர்கள் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்துள்ளனர். இதற்காக வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளனர். அதில் கஞ்சா, போதை ஊசி கும்பல்களை சேர்ந்த புரோக்கர்கள் இணைந்துள்ளனர். புரோக்கர்கள் கொடுக்கும் தகவல்களின் பேரில் சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

Related Stories: