அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு; கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்: முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7-ம் தேதி அறிவிப்பு.!!!

சென்னை: சென்னையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், முதல்வர் பதவியையும் கைப்பற்ற சசிகலா முயற்சி செய்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டார். பின்னர் 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவியும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வருகிற 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், `ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது.

மூத்த அமைச்சர்கள் சமரத்தையடுத்து, அதிமுகவில் யாரும் இனி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 18ம் தேதி அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நேரடியாக வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வருகிற 28ம் தேதி (இன்று) அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம், கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும், இருமொழி கொள்கையே அதிமுகவின் நிலைப்பாடு, இந்திய காச்சார மறுஆய்வு குழுவில் தமிழக அறிஞர்கள் இடம்பெற வேண்டும், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசுக்கு நன்றி, அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா குறித்த விவாதம்

தொடர்ந்து பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்னை குறித்தும் அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்படியே அவர் வெளியில் வந்தால், என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது

முதல்வர் வேட்பாளர் யார்?.. காரசார விவாதம்

மேலும் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தினர். இதனையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 11  பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினர். ஆனால் வழிகாட்டுதல் குழுவை தற்போது அமைக்க இயலாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியதால் தொடர்ந்து விவாதம் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் வேட்பாளர்: அக்.7-ல் அறிவிப்பு

கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அதிமுக செயற்குழுவில் நடைபெற்ற நடைபெற்ற விவாதம் குறித்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கூட்டங்கள் அறிவிப்பார்கள். கட்சி அலுவலகத்தில் இருவரும் ஆலோசனை நடத்தி அக்.7-ம் தேதி அறிவிப்பார்கள் என கூறினார்.

Related Stories:

>