×

வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு

பெங்களூரு,: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம், ஏபிஎம்சி தனியார் மயமாக்கல் உள்ளிட்ட சட்டங்களை ரத்துசெய்யகோரி விவசாயிகள் இன்று நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டித்து ஒருங்கிணைந்த கர்நாடக மாநில விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு இன்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், மஜத, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட தலித் அமைப்புகள், கர்நாடக ரக்ஷணா வேதிகே உள்பட அனைத்து கன்னட சங்கங்கள், கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்கம் உள்பட 300க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு கொடுத்துள்ளது.

அதன்படி இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடந்து வருகிறது. பெங்களூரு நகரம். பெங்களூரு ஊரகம், கோலார், சிக்கபள்ளாபுரா, துமகூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, பல்லாரி, ரெய்ச்சூர், பீதர், கொப்பள், கல்புர்கி, யாதகிரி, ஹாவேரி, தார்வார், பெலகாவி, பாகல்கோட்டை, விஜயபுரா, கதக், சாம்ராஜநகர் மைசூரு, மண்டியா, ராம்நகரம், குடகு, ஹாசன், சிக்கமகளூரு, ஹாசன், மங்களூரு, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் முழு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் முக்கிய சாலைகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

முழு அடைப்பு இருந்தாலும் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் என்று துணைமுதல்வரும் போக்குவரத்து கழக அமைச்சருமான லட்சுமண்சவதி அறிவித்திருந்தார். இருப்பினும் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமாக இருந்ததால், பெரும்பான்மையான மாவட்டங்களில் அரசு பஸ் இயங்கவில்லை. தனியார் பஸ் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓலா, உபர் உள்ளிட்ட வாகன சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில ஆட்டோக்கள் மட்டும் ஓடியது. வர்த்தர்கள் தாமாக முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். இதனால் வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது.

பெங்களூரு உள்பட மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கின. பைக், கார் வைத்துள்ள தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கினாலும் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது. பெரும்பான்மையான கார்மென்ட்ஸ் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. சில தனியார் தொழிற்சாலைகள் இயங்கினாலும் ஊழியர்கள் குறைவாக வந்திருந்தனர். முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெறாது என்ற மாநில அரசின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி போராட்டம் வெற்றி பெற்று வருகிறது.

பெங்களூரு டவுன்ஹால்  எதிரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியாவில் விவசாயிகள் கையி்ல் தீப்பந்தம் ஏந்தியும், உருளுசேவை மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அனைத்து மாவட்ட, தாலுகா அலுவலகங்கள் எதிரில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள், தலித் அமைப்புகள், கன்னட சங்கங்கள், ஆம் ஆத்மி கட்சி உள்பட பல அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஊர்வலம் நடத்தி வருகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Karnataka , Agricultural Laws, Karnataka, Full Closure
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...