பொதுப்பணித்துறை கண்டு கொள்ளவில்லை: கண்மாயை சொந்த செலவில் தூர்வாரிய இளைஞர் பட்டாளம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 1020 கண்மாய்களில் 290 கண்மாய்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பிலும், 730 கண்மாய்கள் ஊராட்சி பராமரிப்பிலும் உள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக இவற்றை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தாலும், கண்மாய்களில் வளர்ந்து நிற்கும் கருவேல் மரங்களை கூட அரசு நிர்வாகம் அகற்றவில்லை.

குடிமராமத்து பணியில் தூர்வாரப்படுவதாக கூறினாலும், கரைகளை மட்டும் ஒப்புக்கு உயர்த்தி வரத்து கால்வாய், மற்றும் கண்மாய் உட்பகுதிகளை தூர்வாறுவதில்லை. அத்துடன் மடை, கழுங்கு மராமத்து பணிகளை தராமாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.

இந்த நிலையில் விருதுநகர் - சிவகாசி இடையே வெள்ளூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள தாத பெருமாள் கண்மாய் சீமைக்கருவேல மரங்கள், செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இந்த கண்மாயை நம்பி 250 ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. கண்மாயை தூர்வார விவசாயிகள் வைத்த கோரிக்கையை பொதுப்பணித்துறை கண்டு கொள்ளவில்லை.

இதனால் வெள்ளூர் கிராம இளைஞர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் கண்மாயில் இருந்து முட்புதர்கள், செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு அகற்றி, படிக்கட்டுகள் கட்டி உள்ளனர். 10 நாட்கள் தொடர்ந்து போராடி கண்மாயை மழைக்காலம் துவங்குவதற்குள் மழைநீரை சேமிக்க சொந்த செலவில் தயார்படுத்தி உள்ளனர். இதை போன்று ஊராட்சி கண்மாயை பயன்படுத்தும் விவசாயிகள், அந்தந்த கிராம இளைஞர்கள் தூர்வாரினால் நிலத்தடி நீரை சேமிக்கவும், விவசாயத்தை காப்பாற்ற முடியும் என வெள்ளூர் கிராம இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: