ஊரடங்கால் முடங்கிய தீபாவளி ஆர்டர்கள்: கார்மென்ட்ஸ் நிறுவனங்களில் ரூ.5 கோடி சட்டைகள் தேக்கம்

பள்ளிபாளையம்: தீபாவளிக்கு 6 வாரங்களே உள்ள நிலையில் ஆர்டர்கள் ஏதும் இல்லாமல் ஆயத்த ஆடை நிறுவனங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. தீபாவளியை நம்பி சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சட்டைகளுடன் கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

ஜவுளி உற்பத்தியில் தனிமுத்திரை பதித்து வந்த பள்ளிபாளையத்தில், சுமார் 150க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருக்கின்றனர். இங்கு 300க்கும் மேற்பட்ட டிசைன்களில் சட்டைகள் தைக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களின் துணிக்கடைகளுக்கு இங்குள்ள சட்டைகள் அனுப்பப்படுகிறது.

உள்ளூரில் உற்பத்தியாகும் துணிகளை கொண்டு, மினிஸ்டர் காட்டன், சாரதி சட்டை, மோனோ காட்டன் உள்ளிட்ட ரகங்களை, பேன்ஸி, பார்மல் போன்ற டிசைன்களில் தைத்து தள்ள அனுபவம் பெற்ற தையல் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வருடங்களாகவே தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆர்டர் எடுத்த நிறுவனங்கள், ஊரடங்கால் முடங்கியுள்ளன. கடந்த 2 மாதங்களாக தான் இங்குள்ள கார்மென்ட்ஸ்கள் மெல்ல இயங்கத் துவங்கின.

ஒரு சட்டை தைக்க கொடுக்கும் கூலியை விட குறைவான விலையிலேயே, இங்கு புதிய சட்டையை வாங்கலாம். 180 ரூபாயிலிருந்தே இங்கு தைத்த சட்டைகள் கிடைக்கிறது. இருந்த போதிலும் தீபாவளி விற்பனைக்கான ஆர்டர்கள் இன்னும் வரவில்லை. வழக்கமாக வரும் ஆர்டர்கள் இல்லாத நிலையில் எப்படியும் தீபாவளிக்கு மக்கள் புதுசட்டை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் இங்குள்ள கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து சட்டைகளை தைத்து இருப்பு வைத்துள்ளனர். பெரிய ஜவுளிகடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் பண்டிகைக்கு சில வாரங்கள் முன்பு ஆர்டர்கள் வரும் என கணக்கு போட்டு கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் காத்திருக்கின்றனர். இதனால், இங்கு மட்டும் சுமார் ரூ.5 கோடி ரூபாய் அளவிற்கு தைக்கப்பட்ட சட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பு நிறைவேறினால் இங்குள்ள கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும். தொழில் மந்தம், வைரஸ் பரவல், வரி உயர்வு, பொருளாதாரம் முடக்கம் போன்ற காரணங்களால் தீபாவளி விற்பனை சுணக்கம் காட்டினால், தீபாவளிக்கு பிறகு ஏராளமான கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் திறக்கப்படாமல் போகும் நெருக்கடி ஏற்படும் அபாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

காட்டன் உற்பத்தி அதிகம்

பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் காட்டன் துணிகளின் உற்பத்தி அதிகம். உள்ளூரில் கிடைக்கும் இந்த துணிகளை சட்டையாக தைத்து அணிவதற்கு ஏற்றவையாக உள்ளது. உற்பத்தி செய்யுமிடங்களிலேயே நேரடியாக துணிகளை உற்பத்தி விலைக்கே வாங்கும், கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் அவற்றை சட்டைகளாக தைத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. இதனால் இங்கு மலிவான விலைக்கு சட்டைகள் கிடைக்கின்றன. சட்டைக்கு பொருத்தமான பேண்ட்டுகளுக்கான துணிகள் இங்கு உற்பத்தியாவதில்லை. மும்பை போன்ற இடங்களில் பேண்ட்டுக்கான துணிகள் உற்பத்தியான போதிலும் அவற்றை அங்கிருந்து கொள்முதல் செய்வதால் துணி விலையை விட போக்குவரத்து செலவு அதிகமாகி விடுகிறது. ஆகவே இங்குள்ள கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் சட்டைகளை மட்டுமே தைத்து அனுப்புகின்றன.

Related Stories: