×

ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சேதம்

திருப்பூர்: திருப்பூரில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டின் தார் தளம் சில நாட்களில் சேதம் அடைந்துள்ளது. திருப்பூரில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் என இரண்டாக செயல்பட்டு வந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் முற்றிலும் இடித்து விட்டு, நவீன வசதிகளுடன் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க பல்வேறு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால், கோவில் வழி பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைப்பதே போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் வழி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு கடந்த 7ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையிலும் கடந்த 20 நாட்களாக மட்டுமே பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தார் தளம் முழுவதிலும் இடிந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போய் காட்சியளிக்கிறது.

இதனால் பஸ் டிரைவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தார்தளம் இவ்வளவு விரைவில் பெயர்ந்து சேதமாகி உள்ளது சமூக நல ஆர்வலர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே இப்பிரச்னையில் தகுந்த நடவடிக்கை எடுத்து தரமான தார் தளம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர், கோவில் வழி பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தின் தார் தளம் சேதம் அடைந்துள்ளது.

Tags : bus stand , Bus stand, damage
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி