×

மஞ்சூர், பந்தலூரில் குரங்குகள் அட்டகாசம்: வியாபாரிகள் அவதி

மஞ்சூர்: மஞ்சூர் கடை வீதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் வியாபாரிகள் அவதிகுள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மற்றும் மேல் பஜார் பகுதியில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள், பொரிகடலை, பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்களை குரங்குகள் எடுத்து செல்வதுடன் கண்ணாடி பாட்டில்களில் உள்ள பொருட்களை தரையில் தள்ளி நாசம் செய்து வருகின்றன. தொல்லை கொடுக்கும் குரங்குகளை விரட்ட முற்பட்டால் அவைகள் ஆக்ரோசத்துடன் தாக்க முற்படுகின்றன. மஞ்சூர் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ள வியாபாரிகள் கடை வீதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து தொலைதுார வனப்பகுதியில் விட வேண்டும் என வனத்துறையினருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா வனச்சரகம் ஆமைக்குளம் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குரங்குகளின் தொல்லை  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் புகுந்து தின்பண்டம் மற்றும் காய்கறிகள்,பழங்கள்,உணவு பொருட்களை திருடி உண்பதும், குழந்தைகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதும் வாடிக்கையாக இருப்பதால், அப்பகுதி மக்கள் குடியிருப்புக்குள் நுழையும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். இந்நிலையில் தேவாலா வனத்துறையினர் சார்பில் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூண்டில் ஒரே ஒரு குரங்கு மட்டும் சிக்கியது மற்றவை வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. வனத்துறை சார்பில் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Pandharpur ,Manjur ,Traders , Manzoor, Pandharpur, monkeys
× RELATED பந்தலூர் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்