×

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!!

டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.பிரபாகரன் உச்சநீதிமன்றத்த்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்‍கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விவாதிக்‍க கேரள அமைச்சரவை கூடியது. அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த மசோதா அமலுக்கு வந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் இறந்துள்ளனர். மேலும் இந்த மசோதாவால் விவசாயிகளின் வாழ்வியல் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.பிரபாகரன் உச்சநீதிமன்றத்த்தில் மனு தாக்கல் செய்து, இந்த 3 சட்டங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Government of Kerala ,Government ,Supreme Court ,Central , Central Government, Agricultural Laws, Government of Kerala, Case
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்