×

தினமும் 7 கிலோ மீட்டர் நடைபயிற்சியால் பலன் நெல்லையப்பர் கோயில் யானை 100 கிலோ எடை குறைந்தது

நெல்லை:  நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யானையின் எடை 100 கிலோ குறைந்தது தெரியவந்துள்ளது. தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.
நெல்லையில் வரலாற்று சிறப்பு மிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் யானை காந்திமதிக்கு 50 வயதாகிறது. இந்த யானை ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் தெப்பகாட்டில் நடைபெறும் 45 நாள் புத்துணர்வு முகாமில் பங்கேற்கிறது. அங்கு யானைக்கு மூலிகை உணவு மற்றும் மருந்து, உடற்பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர் யானை உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தது. அதை ஓரளவு குறைத்தனர். இந்த நிலையில் இந்தமுறையானை சென்ற போது காந்திமதி யானையின் உடல் எடை 4 ஆயிரத்து 250 கிலோவாக இருந்தது. இதை 4 ஆயிரம் கிலோவிற்குள் குறைக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதற்கான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி முறைகள் குறித்தும் அறிவுறைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து தெப்பக்காட்டில் இருந்து திரும்பியது முதல் காந்திமதி யானைக்கு கட்டுபாடு மற்றும் சத்தான உணவு அளிப்பதுடன் நடைபயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடை காலங்களில் கோயிலின் உள் பிரகாரங்களிலேயே நடைபயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது திருவிழாக்கள் பெரியதாக கொண்டாடப்படுவதில்லை. சுவாமி வீதி உலா கிடையாது என்பதால் யானை வெளியில் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் உள் வீதியிலேயே நடைபயிற்சி அளிக்கின்றனர்.

மேலும் சுவாமிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருவதற்கு காலையில் யானை வெளியில் வருகிறது. மேலும் ஒரு முறை ரதவீதியில் நடைபயிற்சியும் மாலையில் கோயில் உள்பிரகாரங்களில் நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது. நாள் தோறும் குறைந்தது 7 கிலோ மீட்டர் தூர நடைபயிற்சி மேற்கொள்கிறது. இதன்காரணமாக யானை காந்திமதி உடல் எடை தற்போது 4 ஆயிரத்து 250 கிலோவில் இருந்து 4 ஆயிரத்து 150 கிலோவாக 100 கிலோ குறைந்துள்ளது.

நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள மாவட்ட கால்நடை மருத்துவமனையில் காந்திமதி யானைக்கு மாதாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைப்படி எடையை மேலும் 100 கிலோ குறைப்பதற்கான பயிற்சி தொடர்ந்து அளிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags : Palan Nellaiyappar , Nellaiyappar Temple, Elephant
× RELATED கடந்த மாதம் பயிற்சி முகாம் தொடங்கியது...