×

புதிய நீரேற்று பாசன சங்கம் அமைத்து மோகனூர் காவிரியில் அதிகாரிகள் துணையோடு நீரை திருடும் கும்பல்

நாமக்கல்: புதிய நீரேற்று பாசன சங்கம் அமைத்து, மோகனூர் காவிரியில் அதிகாரிகள் துணையோடு தண்ணீரை திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மனு அனுப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க அனுமதியில்லை. ஊற்றுநீர் மற்றும் வாய்க்கால் மூலம் மட்டுமே, தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊற்றுநீரை எடுப்பதில், சில விதிமுறைகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை பயன்படுத்தி, பணம் படைத்த விவசாயிகள் கூட்டு சேர்ந்து, நீரேற்று பாசன சங்கங்கள் என்ற பெயரில், அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திருடி வருகின்றனர். சிறிய கிணறு வெட்டி அதை காட்டி, விவசாயத்துக்கு என இலவச மின்இணைப்பு பெறப்படுகிறது. கிணறு அமைந்துள்ள இடம் வரை, காவிரி ஆற்றில் இருந்து நிலத்துக்கு அடியில் குழாய் பதித்து, தண்ணீர் திருடப்படுகிறது. இதற்கு மின்சாரத்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளனர். அவ்வப்போது மின் இணைப்பு துண்டித்தாலும், பின்னர் கண்டும், காணாமலும் இருந்து விடுகின்றனர்.

தற்போது, புதிய நீரேற்று பாசன சங்கங்கள் தொடங்குவதாக கூறி, காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திருடும் முயற்சி பகிரங்கமாக நடந்து வருகிறது. இதற்காக காவிரி  கரையோரம் இடத்தை வாங்கி, அதில் பெரிய கிணறு வெட்டி வருகின்றனர். இதற்காக, மின்வாரியத்திடம் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர். அதில், 500 எச்பி முதல் 1000 எச்பி வரையிலான மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கிணற்றில் இருந்து சுமார் 20 கி.மீ முதல் 40 கி.மீ வரை, காவிரி ஆற்றின் நீரை எடுத்து சென்று விவசாய தோட்டங்களுக்கு பாய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளிடம் ஒரு ஏக்கருக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்று நீரை திருடி விற்க, நீரேற்று பாசன சங்கங்கள் என்ற போர்வையில் சில தனி நபர்கள் மற்றும் அரசியலில் பணபலம் படைத்தவர்கள் இந்த வேலையில் இறங்கியுள்ளனர். மாடகாசம்பட்டி ஊராட்சி ராசாம்பாளையத்தில், ராஜவிநாயகா நீரேற்று பாசன சங்கம் துவங்க ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆர்டிஓ, தாசில்தார் இந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனால் சிறு,குறு விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட காவிரி நீரேற்று பாசனதாரர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திருடும் கும்பல், இதுபோன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். காவிரியில் இருந்து நீரை திருடும்போது, நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் 7 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைக்காது.

கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நிலத்தடி நீர்மட்டம் அதிகபட்ச அளவாக 2 எச்பி முதல் 7 எச்பி வரை உள்ளதாக நீர்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆனால், 500 எச்பி முதல் 600 எச்பி வரை ஊற்றுநீர் எடுக்க நிலத்தடி நீர்மட்டம் எங்குள்ளது?. காவிரி ஆற்றில் இருந்து நீரை திருடி கிணற்றில் விட எந்த ஒரு சாத்தியக்கூறும், நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஆனால், சில தனிநபர்கள், அதிகாரிகளை அழைத்து சென்று, விவசாயிகளிடம் இந்த இடத்தில் தான் தண்ணீர் தொட்டி அமைகிறது என நம்ப வைத்து வருகின்றனர். ராஜவிநாயகா நீரேற்று பாசன சங்கம் தற்போது புதியதாக அமைந்துள்ளது. இங்கு வருவாய் கோட்டாட்சியர், மோகனூர் தாசில்தார், கிராம அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீருக்கு, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. சிறு நீரேற்று பாசன சங்கங்களுக்கு நீர் எங்கிருந்து வருகிறது?. அதனுடைய அடிப்படை தன்மை, நெடுஞ்சாலை துறை, மின்சாரதுறை அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் போன்ற துறைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், நீர் எடுக்க சிறு நீரேற்று பாசன சங்கங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, அதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்யவேண்டும். இது 7 மாவட்ட பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையாகும். காவிரி ஆற்றிலிருந்து நீரை திருடி, சிறு நீரேற்று பாசன சங்கங்கள் விவசாயிகளுக்கு தண்ணீரை விற்கும் போது, மின்வாரியத்திற்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : Gangs ,Irrigation Association , Namakkal, Mohanur, Cauvery
× RELATED குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்