இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது: விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை...ராகுல் காந்தி டுவிட்.!!!

புதுடெல்லி: கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு  உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் 3 மசோதாக்களையும் மத்திய அரசு எளிதாக  நிறைவேற்றியது. பின்னர், மாநிலங்களவையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை தனியாகவும், மற்ற இரு மசோதாக்களை தனியாகவும் மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.

தொடர்ந்து, 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று அரசிதழ் வெளியிடப்பட்டது. இதன் மூலம், 3 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்துள்ளன. எஞ்சியிருந்த கடைசி வாய்ப்பும்  பறிபோய், சர்ச்சைக்குரிய 3 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, கடும் அமளி வெடித்தது. அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி எம்பி.க்கள், நாடாளுமன்ற நடத்தை விதி  புத்தகத்தை கிழித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். இருப்பினும், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை. அவர்களின் குரல் பாராளுமன்றத்திலும் வெளியிலும் நசுக்கப்படுகிறது.  இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான சான்று இங்கே என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>