×

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி கயத்தாறு அருகே தமிழக தொல்லியல் துறை ஆய்வு

கயத்தாறு: கயத்தாறு அருகே உள்ள பராக்கிரமபாண்டியன் குளம் பகுதியில் மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவின்படி தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சமீப காலமாக தமிழகத்தின் பல இடங்களில் நடக்கின்ற அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் தடயங்கள் நமது முன்னோரின் பண்டைய கால வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் விதமாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கொற்கை, சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகள் தொன்மையான பகுதிகள் என கண்டறியப்பட்டு மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறையினரால் பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

கயத்தாறு தாலுகா, ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு கிழக்கே வேப்பன்குளம் மடைக்கு மேற்கே சிற்றாறு பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலுள்ள இந்திரகுளம் என்ற பராக்கிரம பாண்டியன் குளத்தின் வடக்கு பகுதியில் தனியார் சோலார் நிறுவன பணிகளுக்கு குழி தோண்டும் பணி நடந்தது. அப்போது பல இடங்களில் பழங்கால ஓடுகள், மண் பானைகள், மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.

இந்த மண் பானைகள் மற்றும் ஓடுகள், பழங்காலத்தை சேர்ந்தவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்க ஆபரணங்கள், தங்க கலப்பை கிடைத்ததாகவும் அப்பகுதி மக்கள் சொல்லி வந்தனர். இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதனை மேற்கோள்காட்டி தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கே.அருமைராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பராக்கிரமபாண்டியன் குளம் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரி மனுசெய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து 10 வாரத்திற்குள் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி நேற்று கயத்தாறு அருகேயுள்ள வேப்பங்குளம், ராஜாபுதுக்குடி மற்றும் தெற்கு மயிலோடை பகுதிகளில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவன பகுதிகள் மற்றும் பராக்கிரமபாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் பகுதிகளில் தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர், தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தனியார் சோலார் நிறுவனம் குழி தோண்டிய பல இடங்களில் முதுமக்கள் தாழியின் உடைந்த மண்பாண்ட துண்டுகள் காணப்பட்டன.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் போன்றே தெற்கு மயிலோடை பகுதியில் உள்ள பராக்கிரம பாண்டியன் குளத்தில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லுார், சிவகளை போன்ற இடங்களில் ஆய்வு நடத்த தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது போல் கயத்தாறு பகுதிகளில் உள்ள வேப்பங்குளம், ராஜாபுதுக்குடி, தெற்கு மயிலோடை பகுதிகளின் தொன்மையை கண்டறிய விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வு பணிகளை துரிபடுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Tamil Nadu ,Kayatharu ,Madurai High Court Branch , Kayatharu, Department of Archeology, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...