×

மேற்குவங்க மாநில சட்டம் ஒழுங்கு விவகாரம் : அரசியலமைப்பின் எல்லைக்குள் இருங்க..! ஆளுநருக்கு முதல்வர் மம்தா 9 பக்க கடிதம்

கொல்கத்தா, :மேற்குவங்க மாநில சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பான ஆளுநரின் கடிதத்திற்கு, ‘தாங்கள் அரசியலமைப்பின் எல்லைக்குள் இருக்க வேண்டும்’ என்று முதல்வர் மம்தா ஆளுநருக்கு 9 பக்க கடிதம் எழுதியுள்ளார். திரிணாமுல் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல் இருந்து வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக மாநில காவல்துறைத் தலைவருக்கு ஆளுநர் ஜகதீப் தங்கர், கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு ஒன்பது பக்க கடிதம் எழுதினார். அதில், ‘ஆளுநர் ஆனவர் தனது அரசியலமைப்பின் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

ஆளுநரின் புகார்கள் போலீஸ் மற்றும் மாநில அரசுக்கு எதிரான உறுதிப்படுத்தப்படாத தகவல்களாக உள்ளன. அதில், அரசுக்கு எதிரான அவதூறுகளும் உள்ளன. காவல்துறை இயக்குனருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை படித்த பிறகு நான் மிகவும் வருத்தமாக உள்ளேன். இதுகுறித்து உங்கள் டுவிட்டர் பதிவுகளும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மாநில அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதில் இருந்து விலகி இருங்கள். பிரிவு - 163ன் படி, முதல்வரின் உதவி மற்றும் ஆலோசனையின்படி நீங்கள் செயல்பட வேண்டும்.

இதுதான் ஜனநாயகத்தின் சாராம்சமாகும். இத்தகைய சூழ்நிலையில், ஆளுநர் தனது அதிகார வரம்புகளைத் தாண்டி, மாநில அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதிலிருந்து விலகி இருப்பதே சரியானது. எனவே, தாங்கள் அரசியலமைப்பின் எல்லைக்குள் இருக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் அறிவுறுத்தி உள்ளார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் மாநில போலீஸ் இயக்குனர் வீரேந்திராவுக்கு, ஆளுநர் எழுதிய கடிதத்தில், ‘மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்தாண்டு மேற்குவங்க சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், மாநில முதல்வருக்கும், ஆளுநருக்கும் மோதல் இருந்து வருவதால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Mamata Banerjee ,Governor , West Bengal, State, Law and Order, Affairs, Constitution, Boundary, Governor, Chief Minister, Mamata
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...