×

வாகனம் திருடினால் ‘லைசென்ஸ்’ ரத்து : புதிய போர்ட்டலை உருவாக்க மாநிலங்களுக்கு உத்தரவு; மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி:வாகனத்தை திருடினாலோ, கடத்தினாலோ சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வாகனங்களைத் திருடுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய, புதியதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வாகனத் திருட்டில் ஈடுவோரை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்து சிறைக்கு அனுப்புவார்கள். அவரது, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய எந்த அதிகாரமும் இல்லை. அதனால், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்யும் வகையில், புதிய போர்ட்டலை (போக்குவரத்து இணைய பக்கத்தில் தனிவசதி) உருவாக்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த போர்ட்டலில், வாகன திருடன் குறித்து காவல்துறை குறிப்பிட வேண்டும். இதன் அடிப்படையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ) அவரது வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும். இதேபோல், பயணிகளை கடத்திச் செல்லும் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கேப், டாக்ஸிகளில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தப்படும் வகையில், இச்சட்டம் வழிவகை செய்யும். லாரி, பஸ், டாக்ஸி இயக்கும் குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காண வசதி ஏற்படும்.

மேலும், மாநில காவல்துறை, போக்குவரத்துத் துறை அல்லது மற்ற சீருடை பணி அதிகாரிகள், மாநில போர்ட்டலில் உள்ள அட்டவணையில் அவர்களின் வாகன எண் மற்றும் ஓட்டுநர் விபரங்களை பதிவு செய்வது கட்டாயமாகும். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய பிரிவு 25 ஏ-வின்படி ஓட்டுநர் உரிமத்தின் மாநில பதிவேடு கட்டாயமாக்கப்படும். அதில், டிரைவர் மற்றும் வாகனம் தொடர்பான முழு விவரங்களும் பதிவு செய்யப்படும். மாநில பதிவேட்டை மத்திய அரசின் ஓட்டுநர் உரிமத்தின் தேசிய பதிவேடுடன் இணைக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு ஓட்டுநரின் தனிப்பட்ட ஓட்டுநர் உரிம எண், தேசிய பதிவேட்டின் மூலம் வழங்கப்படும்.

இந்த எண் இல்லாமல், மாநில அரசாங்கத்தால் ஒரு நபரின் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவோ அல்லது புதிய ஓட்டுனர் உரிமத்தை பெறவோ முடியாது.  நாடு முழுவதும் உள்ள அனைத்து ஓட்டுநர் உரிமங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. இனி, போலி ஒட்டுவர் உரிமம் உருவாக்குவது எளிதான விஷயமல்ல. ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து  ஆவணங்களும் எம்-டிரான்ஸ்போர்ட்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டு மின்னணு  பதிவில் வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : States ,vehicle theft , Vehicle, License, Cancellation, States, Order
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!