×

கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்துவிடும்: பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்

எதிர்கட்சிகள் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்க்கிறது என்று கூறுவது தவறான கருத்து. மத்திய அமைச்சர் இந்த சட்டத்தை எதிர்த்து ராஜினாமாவும் செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாரதிய கிஷான் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பத்ரி நாராயண சவுத்ரி இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளார்.  அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் இந்த சட்டத்தை எதிர்த்து ராஜ்யசபாவில் பேசியுள்ளார். இந்த 3 சட்டங்களும் இந்தியாவில் உள்ள பெரும்பகுதியானவர்களை பாதிக்கக்கூடிய சட்டம் என்பதே எங்களின் கருத்து. இந்த சட்டத்தில் உணவு தானியம், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அத்தியாவசிய பொருட்களை இல்லை என்றால் வேறு என்ன. அப்படி எதாவது இருந்தால் அதை பிரதமரும், முதல்வரும் விளக்க வேண்டும்.

வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தின் மூலமாக வானளாவிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி எவ்வளவு வேண்டுமானலும் பொருட்களை பதுக்கிக்கொள்ளலாம். செயற்கையான தடுப்பாட்டை ஏற்படுத்தி பொருட்களை விற்பார்கள். பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத மக்கள் கடைசியில் பட்டினி கிடந்து சாகும் நிலை உருவாகும். 85% சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் உள்ளனர். விவசாயிகளுக்கு ஒரு சட்டம் இயற்றும்போது பெரும்பகுதியான விவசாயிகளுக்கு இந்த சட்டம் பயன் அளிக்குமா என்பதை யோசித்து தான் சட்டத்தை இயற்ற வேண்டும்.

இதேபோல், விவசாயிகளிடம் இருந்து பெரு நிறுவனங்கள், அன்னிய நிறுவனங்கள் கொள்முதல் செய்வார்கள். இதனால், உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். அரசாங்கத்தின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ள இடத்திற்கு அருகிலேயே தனியார் விற்பனை கூடங்கள் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதனால், விற்பனை போட்டி ஏற்படும் என்று அரசு கூறுகிறது. அப்படி என்றால் அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சரியாக நடத்தாதது யார் தவறு. தனியார் சந்தைகளை அமைப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விவசாயிகள் முழுக்க முழுக்க தனியார் சந்தைகளை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்தநிலை ஏற்படும் போது அவர்கள் வைத்தது தான் விலையாக இருக்கும். இந்த சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் குறைந்தபட்ச கொள்முதல் ஆதரவு விலை குறித்து ஏதும் இல்லை. சாமிநாதன் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை. இதுபோன்று வெற்று அறிவிப்புகளாக தான் இவை உள்ளது. இந்த சட்டத்தில் முதலமைச்சர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளது. 2019-20ல் மட்டும் தமிழகத்தில் 1,834 கோடி ரூபாய் கரும்பு பாக்கி வரவேண்டியுள்ளது. இந்தியா முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் கரும்புக்கான பாக்கி வரவேண்டியுள்ளது. உள்நாட்டு முதலாளிகளிடமே ஒப்பந்த சாகுபடி சட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு அரசாங்கம் பணத்தை வாங்கிக்கொடுக்க முடியவில்லை.

இதில், பன்னாட்டு முதலாளிகளிடம் இருந்து மட்டும் எப்படி இவர்கள் ஒப்பந்த பணத்தை வாங்கிக்கொடுக்க முடியும். சட்டத்தை அனுமதித்தால் இந்திய விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்துவிடுவார்கள். இதேபோல், இந்திய நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்காது. மொத்தத்தில் அனைத்து மக்களையும் இந்த சட்டங்கள் பாதிக்கும். எனவே, தான் இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என அனைவரும் போராடி வருகின்றனர். இந்த சட்டத்தை திரும்பபெற்றால் தான் எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும். ஒப்பந்த சாகுபடி சட்டத்தை பயன்படுத்தி உள்நாட்டு முதலாளிகளிடம் இருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை விவசாயிகளுக்கு வாங்கிக்கொடுக்க  முடியாத அரசாங்கம், பன்னாட்டு முதலாளிகளிடம் இருந்து மட்டும் எப்படி ஒப்பந்த பணத்தை வாங்கிக்கொடுக்கும்.

* விவசாயிகளை வறுத்தெடுக்கும் சட்டம்: ஏ.கே.எஸ்.விஜயன், திமுக விவசாய அணி மாநில செயலாளர்
மூன்று சட்டங்களும் விவசாயிகளை முற்றிலுமாக பாதிக்கக்கூடிய சட்டங்கள். இப்படி தான் மத்திய அரசு பி.எஸ்.என்.எல் ஐ ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது. தலைவர் கலைஞர் 1972ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய அளவில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலங்களிலும் இல்லாத நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழகத்தில் கொண்டுவந்தார். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கொண்டுவந்ததன் காரணத்தால் தான் தமிழகத்தில் இன்றளவும் விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

அப்போதே மத்திய அரசு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் விலை நிர்ணயம் சட்டத்தை கொண்டுவந்தது. இதேபோல், வேளாண்மை துறை என்பது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதனால், கலைஞர் விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் போது ஊக்கத்தொகை என்ற ஒன்றை கொண்டுவந்தார். இதன்மூலம் அப்போதே விவசாயிகளுக்கு அதிக தொகை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

வட இந்தியாவில் இதை மண்டி திட்டம் என்கிறார்கள். மண்டி திட்டத்தை நாம் நேரடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் என்கிறோம். குறிப்பாக, வடஇந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகிறது என்றால் அவர்கள் அதை ஏற்றுமதி செய்வார்கள். ஆனால், இந்த சட்டத்தின் படி கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலைக்கு தான் வெங்காயத்தை வாங்க வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை நசுக்குகிறது. இதேபோல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை விவசாய பொருட்களை கொண்டுபோய் விற்கலாம் என்கிறார்கள். லாரி வாடகை, ஏற்றுக்கூலி உள்ளிட்டவைகளை நாம் கணக்கு பார்க்கும் போது எப்படி இது சாத்தியப்படும்.

எடப்பாடி பழனிசாமி இந்த சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டம் என்று கூறுகிறார். எந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு இந்த சட்டம் நன்மை பயக்கும் என்று கூறுகிறார் என்று தெரியவில்லை. இப்படி மக்களை வறுத்தெடுக்கும் சட்டமாக தான் இந்த சட்டம் உள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில் முதலில் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தும் போது இது மத்திய அரசின் திட்டம் எங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள். பின்னர், இதை வாபஸ் வாங்கிக்கொள்வதாக தெரிவித்தனர். நீட் தேர்வில் இருந்து புதிய கல்விக்கொள்கை வரை அனைத்தும் தமிழகத்தை பாதிக்ககூடியவைகளாகவே உள்ளது. முன்பெல்லாம் ஒரு திட்டத்தில் இரட்டை வேடம் போடுவார்கள். ஆனால், இப்போது இரட்டை வேடம் போடாமல் நேரடியாகவே ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.

மாநில பட்டியலில் இருக்கும் விவசாயத்தை நீங்கள் ஏன் கையில் எடுக்கிறீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லாமலா ராஜினாமா செய்வார்? இதனால் 28ம் தேதி இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். 80 சதவீதம் பேர் விவசாயிகள். ஒரு கம்யூட்டர் இன்ஜினியரால் சோறு போட முடியுமா, இல்லை அரிசி தான் கொடுக்க முடியுமா? விவசாயியால் தான் அரிசியும், உணவும் கொடுக்க முடியும். எனவே, இவற்றை முழுமையாக உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.  வடஇந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தியாகிறது என்றால் அவர்கள் அதை ஏற்றுமதி செய்வார்கள். ஆனால், இந்த சட்டத்தின் படி கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலைக்கு தான் வெங்காயத்தை வாங்க வேண்டும்.

Tags : Corporates ,P. Shanmugam ,Tamil Nadu Farmers' Association , Corporates will take over: P. Shanmugam, State General Secretary of the Tamil Nadu Farmers' Association
× RELATED உடுமலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து கருத்தரங்கு