×

வியாபாரிகளாக மாற்றக்கூடிய ஒரு புரட்சி: ஜி.கே.நாகராஜ், பாஜ விவசாய அணி மாநில தலைவர்

வேளாண் மசோதா குறித்து கருத்துகள் கேட்டறிய விவசாயிகளுக்கு வெளிப்படையான அழைப்பை விடுத்திருந்தோம். அப்போது, ஏராளமான விவசாய சங்கங்கள் கலந்துகொண்டன. அவர்கள் அனைவரும் எதிர்கட்சிகள் என்ன கருத்துக்களை வைக்கின்றதோ அதை பற்றி தான் கேட்டார்கள். இந்த ஒப்பந்தம் மூலமாக எங்களின் தோட்டத்தை எடுத்துக்கொள்வார்களா என்று சந்தேகங்களை கேட்டனர். இது வெறும் விளைபொருட்களுக்கான ஒப்பந்தம் மட்டுமே. ஆனால், ஒப்பந்தம் போட்டால் உங்களின் நிலங்களை பிடுங்கிக் கொள்வார்கள் என்று எதிர்கட்சிகள் விவசாயிகளிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதேபோல், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று பிரதமரே கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களை பதுக்கிக்கொள்வார்கள் என்றும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது என்றும் கூறுகிறார்கள். ஆனால், இந்த சட்டத்தின் மூலம் விவசாய விலை பொருட்களையோ, அத்தியாவசிய பொருட்களையோ பதுக்க முடியாது. அதற்கென சட்டத்தில் தனியாக இடம் உள்ளது. அப்படி பதுக்குவோர் மீது இந்த சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி உயரும் நேரத்தில் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இதேபோல், குறைந்தபட்ச ஆதாரவிலையை பொறுத்தவரையில் கமிட்டி ஒன்று உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த கமிட்டி ஒன்று கூடி குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்யும். பொருட்களை நேரடியாக மண்டியில் விற்கலாம். இதற்கு எந்தவித தடையும் கிடையாது.

இந்தியா முழுவதும் உள்ள மண்டிகளில் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்கலாம். இதேபோல், உழவர் உற்பத்தி நிறுவனம் என்று 10 ஆயிரம் நிறுவனத்தை பிரதமர் ஆரம்பித்துள்ளார். இ-மார்கெட் மூலமாகவும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்க முடியும். உழவர்களையே வியாபாரிகளாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த மசோதாக்களை தமிழக விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து அதை மீறும் போது அந்த நிறுவனத்தை இந்த சட்டத்தின் மூலம் ஜப்தி செய்ய முடியும். இதை விவசாயிகள் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே பால், கரும்பு உள்ளிட்டவைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்திற்கு எந்த ஒரு சட்டத்தீர்வும் இல்லாமல் இருந்தது. ஆனால், இனிமேல் அப்படி கிடையாது. தற்போது ஒப்பந்தத்திற்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். ஒப்பந்தம் போடுவதன் மூலம் பணத்தை கொடுத்தபின் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் விலக முடியும். விலையை திருத்துவதற்கும் இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் அடிமையாக்கப்பட மாட்டார்கள். வஞ்சிக்கப்பட மாட்டார்கள். விவசாயிகள் தங்களை வளப்படுத்திக்கொள்ள தேவையான அடிப்படையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளோம்.  சந்தைகளை திறந்துவிட்டுள்ளோம். ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளை எங்குவேண்டுமானாலும் கொண்டுசென்று விற்பனை செய்துகொள்ளலாம்.

இது புதிய வியாபார புரட்சி. விவசாயிகளை வியாபாரிகளாக ஆக்கக்கூடிய ஒரு வியாபார புரட்சியே இது. இந்த விவசாய மசோதாக்களின் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளை நாம் லாபத்திற்காக பயன்படுத்திகொள்கிறோம். அரசு நேரடி கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு முன்னேற்றம் இல்லை. எனவே, மக்களுக்கு தேவையானவற்றையே செய்கிறோம். எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. விவசாயிகள் இந்த திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். விவசாய மசோதாக்களின் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளை நாம் லாபத்திற்காக பயன்படுத்திகொள்கிறோம். அரசு நேரடி கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு முன்னேற்றம் இல்லை. எனவே, மக்களுக்கு  தேவையானவற்றையே செய்கிறோம்.

* விவசாயிகள் கடனாளியாக மாறுவார்கள்: பூ.விசுவநாதன், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர்
வேளாண் மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் தன்னிச்சையாக ஒரு பொருளை விற்பனை செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விளைபொருட்களுக்கான விலையை குறைப்பார்கள். என்னதான் ஒப்பந்தம் போட்டாலும் குறைவான விலைக்கே பொருட்களை வாங்குவார்கள். வேளாண் சட்ட மசோதாவானது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதமாக இருக்கிறது.

ஒப்பந்தம் போட்டு கடன் நிறைய கொடுப்பார்கள். மகசூல் வராத பட்சத்தில் வாங்கிய கடனை கொடுக்க வேண்டும்.  இல்லையென்றால் நிலங்களை கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். இதேபோல், அரசு என்ன விதைகளை கொடுக்கிறதோ அதையே பயிர் செய்ய வேண்டும். அப்படி பயிர்செய்வதன் மூலம் நமது விவசாய நிலம் பாதிக்கப்படும். நாம் நமது மரபு சார்ந்த விதைகளை விதைத்து வருகிறோம். ஆனால், இந்த சட்ட மசோதாவிற்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன விதை கொடுக்கிறார்களோ அதையே விதைக்க வேண்டும். என்ன மருந்து கொடுக்கிறார்களோ அதையே அடிக்க வேண்டும். இதனால், நமது மக்களுக்கு பலவகையான நோய்களை உண்டாக்கும் உணவுகளை கொடுக்கும் நிலை ஏற்படும்.

இந்தசூழலில் கேரள அரசு இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதிமுக அரசு இதை எதிர்க்காமல் ஆதரவு தெரிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு எங்கள் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் நெல்கொள்முதல் நிலையங்கள், மார்க்கெட்டிங் கமிட்டி ஆகியவை இந்த மசோதாவால் ரத்து செய்யப்பட்டுவிடும். இந்த சட்டத்தின் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நெல்கொள்முதல் செய்வார்கள்.

ஆனால், உரிய நேரத்தில் பணத்தை தரமாட்டார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக விவசாயிகள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், விவசாயிகள் அவசர தேவைக்கு வெளியில் வட்டிக்கு வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். ஆக மொத்தம் இந்த சட்டம் விவசாயிகளை கண்டிப்பாக கடனாளிகளாக ஆக்கி தெருவில் பிச்சைக்காரர்களாக நிறுத்திவிடும். ஆளும் மத்திய பாஜ அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாகவே செயல்படுகிறது. தற்போது, மத்திய அரசு அறிவித்த விலைக்கே பொருட்களை வாங்கவில்லை. தமிழகத்தில் இடைத்தரகர் மூலமாகவே விளை பொருட்களை வாங்குகிறார்கள்.

உதாரணமாக மத்திய அரசு 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்தால் இடைத்தரகர்கள் 35 ரூபாய்க்கு தான் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை வாங்குகிறார்கள். வேளாண் மசோதா நடைமுறைக்கு வராத போதே கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் போன்றவைகள் இடைத்தரகர் சொல்லும் விலைக்கே எடுக்கிறார்கள். இதுபோன்ற நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தால் இந்த விலைக்கு கூட பொருட்களை விற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவார்கள்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதுவே இன்னும் அமல்படுத்தவில்லை. இந்தநிலையில், வேளாண் மசோதாவை மட்டும் அமல்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாகும். சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த சட்டம் அழிவையே ஏற்படுத்தும். விவசாயிகளை அழிக்கக்கூடிய மசோதாவாகவே இது உள்ளது. எனவே, இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வாங்குவதற்காக விவசாயிகள் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இதனால், விவசாயிகள் வட்டிக்கு வாங்க தள்ளப்படுவார்கள். ஆக மொத்தம் இந்த சட்டம் விவசாயிகளை கண்டிப்பாக கடனாளிகளாக ஆக்கி தெருவில் நிறுத்திவிடும்.’’

Tags : revolution ,GK Nagaraj ,merchants ,BJP ,team , A revolution that can turn into merchants: GK Nagaraj, state leader of the BJP agricultural team
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...