×

உலகளவில் கொரோனாவுக்கு 10 லட்சம் பேர் பலி: அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், அமெரிக்கா 2 லட்சத்து 4 ஆயிரத்து 50 பேருடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சீனாவில் இருந்து கடந்தாண்டு டிசம்பரில் கிளம்பிய கொரோனா, உலகம் முழுவதும் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் உலகளவில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 3 கோடியே 28 லட்சத்து 70 ஆயிரத்து 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலையில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 500 பேராக இருந்த பலி எண்ணிக்கை, நள்ளிரவில் 10 லட்சத்தை கடந்தது. இந்த பாதிப்பிலும், பலியிலும் உலகளவில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்நாட்டில் இதுவரையில் மொத்தம் 70 லட்சத்து 79 ஆயிரத்து 689 பேர் பாதித்துள்ளனர். 2 லட்சத்து 4 ஆயிரத்து 506 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று, மொத்த பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது. அதேபோல், 94 ஆயிரத்து 503 பேர் இறந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள பிரசேில் நாட்டில் 47 லட்சத்து 17 ஆயிரத்து 991 பேர் பாதித்துள்ளனர். இங்கு, பலி எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 406 ஆக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதித்தவர்கள், இறந்தவர்கள் பற்றிய புள்ளி விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, நேற்று புதிதாக 88,600 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மேலும், புதிதாக 1,124 பேர் இறந்துள்ளனர்.

* இந்தியாவில் 50 லட்சம் நோயாளிகள் குணமாகினர்
இந்தியாவில் கொரோனாவால் பாதித்து குணமானவர்களின் எண்ணிக்கையும், சதவீதமும், மற்ற உலக நாடுகளை விட அதிகமாகவே உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 82 ஆயிரம் கொரோனா நோயாளிகள் குணமாகினர். இதன் மூலம், குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. இதன் சதவீதம், 82.46 ஆக உள்ளது. தற்போது, 9 லட்சத்து 56 ஆயிரத்து 402 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் இதன் சதவீதம் 15.96 ஆக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.58 ஆக குறைந்துள்ளது.

* துணை ராணுவத்தில் 36,000 பேர் பாதிப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை உட்பட 7 துணை ராணுவப் படைகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் இதுவரை 36 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 128 பேர் பலியாகி விட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 6,646 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமாகி விட்டனர். அதிகப்பட்சமாக, எல்லை பாதுகாப்பு படையில்தான் 10 ஆயிரத்து 636 பேர் பாதித்துள்ளனர். அதே நேரம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்தான் அதிகபட்சமாக 52 வீரர்கள் இறந்துள்ளனர். மத்திய காவல் படையில் இதுவரை 36 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 128 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இதுகுறித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Corona ,US , Corona kills 10 lakh people worldwide: US tops list
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...