சென்னை உதவி கமிஷனர் பெயரில் மலையாள இயக்குனரிடம் நூதன முறையில் பணம் மோசடி

சென்னை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சேது. மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் லோகிததாஸிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார். ‘ஷ்யாம ராகம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இவரது நெருங்கிய நண்பர் ஜூலியஸ் சீசர். சென்னையில் உதவி போலீஸ் கமிஷனராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவு சேதுவின் செல்போனில் மெசெஞ்சர் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை பார்த்தபோது சென்னையில் உள்ள ஜூலியஸ் சீசர் அனுப்பி இருந்தார். அந்த தகவலில், ‘மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே ரூ.10 ஆயிரம் அனுப்பி வைக்கவும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தவிர ‘போன்-பே’ கணக்கு விபரமும் கொடுக்கப்பட்டிருந்தது. நெருங்கிய நண்பர் என்பதால் சேது உடனே ‘போன்-பே’  கணக்கில் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு பணம் கிடைத்து விட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து சேது மெசெஞ்சர் கால் மூலம் ஜூலியஸ் சீசரை அழைத்தார். ஆனால் போனை எடுக்கவில்லை. அதே சமயம் திரும்ப அழைப்பதாக குறுஞ்செய்தி மட்டும் வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரூ.15 ஆயிரம் கேட்டு சேதுவுக்கு மெசஞ்சரில் தகவல் வந்தது. திருப்பி அழைத்தபோது போனை எடுக்கவில்லை. இருப்பினும் காலையில் மொத்த தொகையையும் திரும்பி அனுப்பி விடுவதாக மெசஞ்சரில் குறுஞ்செய்தி மட்டும் வந்தது.

மெசெஞ்சரில் ஆக்டிவாக இருந்தபோதும், தான் பலமுறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த சேது, ஜூலியஸ் சீசரின் செல்போன் எண்ணில் நேரடியாக அழைத்தார். தூக்க கலக்கத்தில் போனை எடுத்தவர், தான் பணம் கேட்டு தகவல் எதுவும் அனுப்பவில்லை, இதற்கு முன்பும் தனது பெயரில் போலி கணக்கு மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது எனவும் ஜூலியஸ் சீசர் தெரிவித்தார். அதன்பிறகுதான் இது மோசடி என சேதுவுக்கு தெரிந்தது. விசாரணையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து இந்த மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற ஆன்-லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>