கொரோனா காலத்திலும் குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை: காணொலி காட்சி மூலம் நடந்த கரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: அதிமுக அரசின் அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று குற்றம் சாட்டினேன். கொரோனா காலத்திலும் அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கரூர் மாவட்ட திமுக சார்பில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 100 திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் -மத்திய பாஜக அரசின் விவசாய விரோத சட்டத்துக்குத் தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாங்கள் மட்டுமல்ல; பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். இந்தத் துரோகச் சட்டத்தை ஆதரித்ததால் தான், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறார். கொரோனாவை முதல்வர் பழனிசாமி கட்டுப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்.

மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத் தான் இருக்கும். கொரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அதிமுக ஆட்சியில் உருவாகிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும் தான் கொரோனா பயன்படுகிறது. இந்த அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான் குற்றம் சாட்டினேன். அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை. இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது ரூ.3500 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகாரை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று உத்தரவு போட்டது.

நேர்மையானவராக இருந்தால் பழனிசாமி புகாரை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் மட்டும் தான் பழனிசாமி பதவியில் இருக்கிறார். உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கினால் சி.பி.ஐ. வழக்கை பழனிசாமி எதிர்கொண்டாக வேண்டும். துணை முதல்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக சார்பில் தரப்பட்டது. அவர்கள் அதனை எடுத்து முறையான விசாரணை செய்யவே இல்லை. அதன்பிறகு நீதிமன்றம் போனோம். நீதிமன்றம் இதன் மீது விசாரணை நடத்துங்கள் என்று உத்தரவு போட்டார்கள். ஆனால் விசாரணையை முடக்கி வைத்துள்ளார்கள்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி யை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வேன். இந்த அமைச்சரவையில் அதிகம் சம்பாதித்த அமைச்சர்களில் முதலிடம் அவருக்குத் தான். பல்வேறு பினாமிகளின் மூலமாக டெண்டர்களை அவரே எடுத்து அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டு இருக்கிறார். நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு என்று தங்கமணி மீது புகார் கொடுத்து இருக்கிறோம். கொரோனாவை வைத்து ஊழல் செய்ய முடியும் என்பதை இந்தியாவுக்குக் காட்டியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். மருந்துகள் வாங்கியதில் ஊழல், கிட்ஸ் வாங்கியதில் ஊழல், தூய்மைப் பொருள்கள் வாங்கியதில் ஊழல் என்று மொத்தமும் ஊழல் மயம்.

மக்களுக்காக, மக்களைப் பற்றி கவலைப்படக் கூடிய, ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். அதனை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள். நாம் அதற்கான பணிகளைத் தொடங்குவோம். கொரோனாவை விடக் கொடிய ஊழல் வைரஸ் கூட்டத்தை இந்தக் கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும். பெரியாரின் சமூகநீதி ஆட்சியை அமைப்போம். அண்ணாவின் மாநில சுயாட்சி ஆட்சியை அமைப்போம். கலைஞரின் நவீனத் தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கு கரூர் முப்பெரும் விழாவில் சபதம் எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வேன். இந்த அமைச்சரவையில் அதிகம் சம்பாதித்த அமைச்சர்களில் முதலிடம் அவருக்குத் தான்.

Related Stories: