ராணிப்பேட்டை அருகே அத்தை வீட்டுக்கு வந்த போது 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த 16 வயது சிறுவன்: போக்சோ சட்டத்தில் கைது

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரது அத்தை வீடு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளது. சிறுவன் அடிக்கடி தனது அத்தை வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை மகளான 13 வயது சிறுமியுடன் பழகிவந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி தனியாக சந்தித்து பேசிய நிலையில் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பிணி ஆனார். இதையறிந்த இருவீட்டு பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் உறவினர்கள் என்பதால் இருவருக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.

இதற்கிடையில் கர்ப்பமான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக சில தினங்களுக்கு முன் அவரது பெற்றோர் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், 13 வயதில் சிறுமி கர்ப்பமானது குறித்து விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்த விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். டாக்டர்களின் தகவலின்படி மாவட்ட சமூக நலத்துறை சேவை மைய அலுவலர் பிரியங்கா, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிந்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 13 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கர்ப்பிணியாக்கி திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>