தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 1,731 பேருக்கு டெங்கு, 249 பேருக்கு மலேரியா 189 பேருக்கு சிக்கன் குனியா காய்ச்சல்: கொரோனாவுடன் சேர்ந்து பரவும் மழைக்கால நோய்கள் உஷார்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1731 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 249 பேருக்கு மலேரியாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 189 பேருக்கு சிக்கன் குனியா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தினசரி தொற்று இதே நிலையில்தான் உள்ளது. ஆனால் மரண எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி 60 முதல் 80 பேர் மரணம் அடைகின்றனர்.

தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா தொற்று தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 1,731 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து ஜூலை மாதம் வரை 249 பேருக்கு மலேரியாவும், ஆகஸ்ட் மாதம் வரை 189 பேருக்கு சிக்கன் குனியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. கொரோனா மற்றும் மழைக்கால நோய்களுக்கு காய்ச்சல்,சளி, இருமல் என்று பொதுவான அறிகுறி தென்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :

டெங்கு, கொரோனா என்று அனைத்து நோய்களுக்கு காய்ச்சல் பொதுவான அறிகுறியாக உள்ளது. எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன், டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீட்டைச் சுற்றி மற்றும் வீடுகளுக்கு உள்ளே கொசு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழைய குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா போன்று டெங்கு காய்ச்சலுக்கும் தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. அறிகுறி கொண்டு அதற்கு ஏற்றது போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: