×

கொரோனா தொற்று காரணமாக பதிவுத்துறையில் ஒரே நாளில் 2 பேர் பலி

சென்னை: கொரோனா தொற்று காரணமாக பதிவுத்துறையில் ஒரே நாளில் 2 பேர் பலியான சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யவும், சானிடைசர், சோப் வைப்பது, கிருமி நாசினி கொண்டு அலுவலகத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஐஜி அலுவலகம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு பல இடங்களில் நடைமுறையில் பின்பற்றப்படவில்லை. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கொரோனவால் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் கடை நிலை ஊழியர் முதல் சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி என 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலக பத்திர எழுத்தாளர் கோவிந்தராஜ், தென்காசி பதிவு மாவட்டம் மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் (பொறுப்பு) வை.சுப்ரமணியன், தூத்துக்குடி ஏஐஜி ரவிச்சந்திரன், மதுரை 4ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சண்முக சுந்தரம், பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கவிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு பலியாகினர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த தி.நகர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் சக்கரவர்த்தி, பதிவுத்துறை தலைவர் அலுவலக பணியாளர் (கட்டுனர்) பேபி என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் பதிவுத்துறையில் தொடர்ந்து ஊழியர்கள் பலியாகி வரும் சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இனிவருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Corona , Corona infection kills 2 in one day in registry
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...