பாஜ கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளமும் விலகியது: வேளாண் மசோதா மோதலால் முடிவு

சண்டிகர்: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் விலகி உள்ளது. பஞ்சாப் மாநில கட்சியான சிரோன்மணி அகாலி தளம் (எஸ்ஏடி), 1997ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜ.வுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தது. பின்பு, 1998ல் நடந்த மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. அதன் பிறகு, கடந்த 23 ஆண்டுகளாக இந்த கூட்டணி நீடித்து வந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், உறுப்பினர்களின்  கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவை, மாநிலங்களவையில் 3 முக்கிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி  வருகின்றனர்.

இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலி தளத்தை சேர்ந்த மத்திய உணவு பதனிடும்  துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜ தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம் நேற்று வெளியேறியது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் நேற்று முன்தினம் இரவு கூறுகையில், ``அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். எனவே, கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்,’’ என்றார். இதன்மூலம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த 23 ஆண்டு நட்பை இக்கட்சி துண்டித்துள்ளது.

* ஒரே ஆண்டில் 2 கட்சிகள்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக விளங்கிய சிவசேனா, இந்தாண்டு மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜவுடன் ஏற்பட்ட மோதலால் வெளியேறியது. இதன் மூலம், இந்த கூட்டணியுடன் இருந்த 30 ஆண்டு உறவை அது முறித்துக் கொண்டது. தற்போது, சிரோன்மணி அகாலி தளமும் வெளியேறி உள்ளது.  

Related Stories:

>