திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: திருச்சியில் தந்தை பெரியார் சிலை அவமதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர் : திருச்சி-இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): தந்தை பெரியாரின் சிலை மீது காவிச்சாயம் பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோழைத்தனமான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்

எல்.முருகன் (பாஜக தலைவர்): இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல் துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும். இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்ம நபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும். வைகோ(மதிமுக பொதுச் செயலாளர்): தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதின் மூலமாக, தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்றி விட முடியாது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): பெரியார் சிலையை இழிவுபடுத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்) : தந்தை பெரியார் சிலையை களங்கப்படுத்தியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். அதை செய்ய தமிழக அரசு தவறுமேயானால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): திருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியவர்கள் கண்டனத்துக் குரியவர்கள் மட்டுமல்ல; தண்டனைக்குரியவர்கள்.

Related Stories:

>