வாடகை பாக்கி கேட்டு தகராறு செய்த வீட்டு உரிமையாளர் படுகொலை: தடுக்க முயன்ற இருவருக்கு கத்திக்குத்து; முதியவர் கைது

அண்ணாநகர்: சூளைமேட்டில் வாடகை பாக்கியை கேட்டு தகராறில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக, முதியவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சூளைமேடு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் சதீஷ் (35). இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நாராயணன் (60), கடந்த 4 மாதங்களாக வாடகை பணம் தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சதீஷ், அவரது மனைவி சுகன்யா (30), சதீஷின் தந்தை சந்திரமோகன் (60) ஆகிய 3 பேரும், நாராயணனிடம் வாடகை பாக்கியை கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘‘தற்போது என்னிடம் பணம் இல்லை. ஒரு வாரத்தில் வாடகை பணத்தை கொடுத்து விடுகிறேன்,’’ என கூறியுள்ளார். இதை ஏற்காத சுகன்யா, ‘‘4 மாத வாடகை பாக்கியை இப்போதே கொடுங்க. இல்லையேல் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புங்க,’’ என தெரிவித்துள்ளார்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த நாராயணன், சமையலறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, சுகன்யாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதை தடுக்க முயன்ற கணவர் சதீஷ், மாமனார் சந்திரமோகன் ஆகியோரையும் நாராயணன் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தனர், சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுகன்யா இறந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த நாராயணனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>